வந்து முடிதலுமாகிய இந் நான்கு முடிபும், கொளத்தகு மரபின் - சொற்கு முடிபாகக் கொளத்தகும் முறையானே, ஆகிடனுடைத்து - தன்முடிபாம் இடன் உடைத்து என்றவாறு. |
கொளத்தகு மரபினென்றதனான் வல்லெழுத்து முதன்மொழி வந்துழி ஐகாரம் வருதலும், ஐகாரம் வந்துழி வல்லெழுத்து மிகுதலும் மிகாமையும், ஆகாரம் வந்துழி வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. |
உதாரணம் : இல்லென நிறுத்திக் கொற்றன், சாத்தன், தெளிவு, பொருள் எனத் தந்து வல்லெழுத்தும் ஐகாரமுங் கொடுத்து இல்லைக் கொற்றனென ஏனையவற்றோடும் ஒட்டுக. |
இன்னும் அவ்வாறே நிறுத்தி ஐகாரமே கொடுத்து இல்லைகொற்றன், சாத்தன், தெளிவு, பொருள் என வல்லெழுத்து மிகாது முடிக்க. |
இன்னுங் கொளத்தகு மரபினென்றதனான் ஏனைக் கணத்தின் முன்னும் ஐகாரமே கொடுத்து இல்லைஞாண் நூல் மணி வானம் ஆடை என ஒட்டுக. |
இஃது இல்லென்பதோர் முதனிலை நின்று வருமொழியோடு இங்ஙனம் புணர்ந்ததென்பது உணர்தற்கு இல்லென் கிளவியென்றும் இயற்கையாதலுமென்றுங் கூறினார். இம்முடிபு வினையியலுள் விரவுவினைக்கண் 'இன்மை செப்பல்' என்புழி 'இல்லை இல்' (எழு - 222) என்று உரைகூறியவதனானும், அவனில்லை என்றாற்போல்வன உதாரணமாக எல்லா ஆசிரியருங் காட்டியவாற்றானும் உணர்க. |
இதனானே இங்ஙனம் புணர்த்தசொல்லன்றி இல்லையென ஐகார ஈறாய் நிற்பதோர் சொல் இன்மையும் உணர்க. ஆயின், இன்மை முதலியவற்றையும் இவ்வாறே புணர்க்கவெனின் அவை வருமொழியின்றி ஒரு சொல்லாய் நிற்றலிற் புணர்க்காராயினார். |
இனி இயல்பு வருமாறு :-எண்ணில் குணம் செய்கை துடி பொருள் எனவும், பொய்யில் ஞானம் மையில் வாண்முகம் எனவும் வரும். |
இனி ஆகாரம் வருமாறு :- இல்லாக்கொற்றன் சாத்தன் தேவன் பொருள் என ஆகாரம் வல்லெழுத்துப்பெற்றன. |