புள்ளிமயங்கியல்297

376.

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.
 

இஃது    இவ்    வீற்றுத்     தொழிற்பெயர்க்கு   அல்வழிக்கண்ணும்
வேற்றுமைக்கண்ணுந்  திரிபும்  உறழ்ச்சியும்  விலக்கித்  தொழிற்பெயரோடு
மாட்டெறிதலின் எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : தொழிற்பெயரெல்லாம்    -      லகார    ஈற்றுத்
தொழிற்பெயரெல்லாம்,  தொழிற்பெயர்  இயல  -  ஞகார  ஈற்றுத் தொழிற்
பெயரின் இயல்பினவாய் இருவழியும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும்,
மென்கணத்தும்  இடைக்கணத்து  வகரத்தும்    உகரமும்   பெற்றுமுடியும்
என்றவாறு.
 

உதாரணம் : புல்லுக்கடிது கல்லுக்கடிது வல்லுக்கடிது சிறிது தீது பெரிது
ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை  சிறுமை தீமை
பெருமை  ஞாற்சி  நீட்சி  மாட்சி  வன்மை  எனவும்  வரும். இவற்றிற்குப்
புல்லுதல் கல்லுதல் வல்லுதல் எனப் பொருளுரைக்க.
 

இனி  எல்லாமென்றதனாற்  றொழிற்பெயர்விதி   எய்தாது  பிற   விதி
எய்துவனவுங்   கொள்க.   கன்னல்கடிது   பின்னல்கடிது   கன்னற்கடுமை
பின்னற்கடுமை  எனவும் வரும். இதனானே மென்கணம் வந்துழிப் பின்னன்
ஞான்றது நீண்டது மாண்டது பின்னன் ஞாற்சி நீட்சி மாட்சி என ஒட்டுக.
 

இனி  ஆடல்  பாடல்  கூடல்   நீடல்  முதலியனவும்  அல்வழிக்கண்
இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் முடிதல் இதனாற் கொள்க.
 

(81)
 

377.

வெயிலென் கிளவி மழையிய னிலையும்.
 

இது  திரிபுவிலக்கி  அத்தும்  இன்னும் வகுத்தலின் எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : வெயில்  என்  கிளவி  மழையியல்   நிலையும்  -
வெயிலென்னுஞ்  சொல்  மழையென்னுஞ்  சொற்போல  அத்தும் இன்னும்
பெற்றுமுடியும் என்றவாறு.