புள்ளிமயங்கியல்303

பெயரும்  எண்ணுப்பெயரும்  வருமொழியாய்   வருமிடத்து,   நெடுமுதல்
குறுகலும்  உகரம்  வருதலுங்  கடிநிலையின்றே  ஆசிரியற்க - முன்னின்ற
நெட்டெழுத்தின்  மாத்திரை  குறுகலும்  ஆண்டு  உகரம் வருதலும் நீக்கு
நிலைமையின்று ஆசிரியற்கு என்றவாறு.
 

உதாரணம் : எழுகலம்  சாடி  தூதை  பானை  நாழி  மண்டை வட்டி
எனவும், ஏழுகழஞ்சு தொடி பலம் எனவும், எழுமூன்று எழுநான்கு எனவும்
வரும்.
 

நிலையென்றதனான்   வன்கணத்துப்   பொருட்பெயர்க்கும்   இம்முடிபு
கொள்க. எழுகடல் சிலை திசை பிறப்பு என வரும். 
 

(94)
 

390.

பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி
நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி.

 

இது  மேலதற்கு  எய்தியதன்மேற்  சிறப்புவிதி  வகுத்தது,  வருமொழி
நோக்கி விதித்தலின்.
 

இதன் பொருள் : பத்து   என்    கிளவி    ஒற்றிடை   கெடுவழி -
அவ்வேழனோடு   பத்தென்பது    புணருமிடத்து   அப்பத்தென்   கிளவி
இடையொற்றுக்  கெடுவழி, ஆய்தப்புள்ளி நிற்றல்வேண்டும் - ஆய்தமாகிய
புள்ளி நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
 

உதாரணம் : எழுபஃது என எரும். 
 

(95)
 

391.

ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே.
 

இது  நெடுமுதல்  குறுகிநின்று  உகரம்பெறாது   என்றலின்  எய்தியது
ஒருமருங்கு மறுத்தது.
 

இதன் பொருள் : ஆயிரம்   வருவழி    -     ஏழென்பதன்   முன்
ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வருமொழியாய் வருமிடத்து, உகரங்கெடும்
- நெடுமுதல் குறுகிநின்று உகரம்பெறாது முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஏழாயிரம் என வரும்.

(96)