9. குற்றியலுகரப் புணரியல் | 406. | ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொட ராய்தத்தொடர்மொழி வன்றொடர்மென்றொட ராயிரு மூன்றே யுகரங் குறுகிடன். | | என்பது சூத்திரம். இவ் வோத்துக் குற்றியலுகரமென்று கூறப்பட்ட எழுத்துப் பொருட்பெயரோடும் எண்ணுப்பெயர் முதலியவற்றோடும் புணரும் முறைமை உணர்த்தினமையிற் குற்றியலுகரப் புணரியலென்னும் பெயர்த்தாயிற்று. இது 'மெய்யே யுயிரென் றாயீ ரியல' (எழு - 103) என்றவற்றுள் உயிரினது விகாரமாய்நின்ற குற்றுகரத்தை இருமொழிக்கண்ணும் புணர்க்கின்றமையின் மேலை ஓத்தினோடு இயைபுடைத்தாயிற்று. இத்தலைச் சூத்திரம் மொழிமரபினகத்து இருவழிய என்ற குற்றுகரம் இதனகத்து இனைத்து மொழியிறுதி வருமென்று அவற்றிற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துகின்றது. அப்பெயர்பெயர், அம்முறைமுறை, அத்தொகைதொகை. 'தொடர்மொழி யீற்று' (எழு - 36) வருமென்று ஆண்டுக் கூறியவதனை ஈண்டு ஐந்துவகைப்படுத்தி அதனோடு 'நெட்டெழுத் திம்பரும்' (எழு - 36) என்றது ஒன்றேயாதலின் அதனையுங் கூட்டி அறுவகைத்தென்றார். | இதன் பொருள் : ஈரெழுத் தொருமொழி - இரண்டெழுத்தானாகிய ஒருமொழியும், உயிர்த்தொடர் - உயிர்மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், இடைத்தொடர் - இடையொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆய்தத் தொடர்மொழி - ஆய்தமாகிய எழுத்து மேல்வரும் மெய்யைத் தொடர்ந்துநின்ற சொல்லும், வன்றொடர் - வல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், மென்றொடர் - மெல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆயிருமூன்றே - ஆகிய அவ் வாறுசொல்லுமே, உகரங் குறுகு இடன் - குற்றியலுகரங் குறுகிவரும் இடன் என்றவாறு. | உதாரணம் : நாகு, வரகு, தெள்கு, எஃகு, கொக்கு, குரங்கு என வரும். |
|
|