இஃது 'இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே' (எழு - 37) என்றதனாற் புணர்மொழிக்கண் அரைமாத்திரையினுங் குறுகுமென எய்தியதனை விலக்கி 'அவ்விய னிலையு மேனை மூன்றே' (எழு - 12) என்ற விதியே பெறுமென்கின்றது. |
இதன் பொருள் : அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லுமிடத்தும், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும், எல்லா இறுதியும் உகரம் 1நிலையும் - ஆறு ஈற்றின்கண்ணும் உகரம் தன் அரைமாத்திரையைப்பெற்று நிற்கும் என்றவாறு. |
வருமொழியானல்லது அல்வழியும் வேற்றுமையுங் விளங்காமையின் 'அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்' எனவே இருமொழிப் புணர்ச்சியென்பது பெற்றாம். இவ் விருமொழிக்கட் பழைய அரைமாத்திரைபெற்றே நிற்குமென்றார். அன்றி இருமொழிப் புணர்ச்சிக்கண் ஒருமாத்திரை பெறுமென்றார்க்குப் பன்மொழிப் புணர்ச்சியாகிய செய்யுளிலக்கணங் குற்றுகரத்தான் நேர்பசை நிரைபசை கோடலும் அவற்றான் அறுபது வஞ்சிச்சீர்கோடலும் பத்தொன்பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொரு தொடைகோடலும் இன்றாய், முற்றியலுகரமாகவே கொள்ளவேண்டுதலின் மாறுகொளக் கூறலென்னுங் குற்றந் தங்குமென்று உணர்க. |
|
1. இச் சூத்திரத்தில் 'நிலையும்' என்பதை 'நிறையும்' என்று பாடங்கொள்பவர் இளம்பூரணர். பேராசிரியரும் அங்ஙனமே பாடங்கொள்வர். பேராசிரியர் செய்யுளியலுள் ஞாயிறு முதலியன முற்றிலுகரம்போலக் கொள்ளப்படுமன்றிக் குற்றியலுகரம் முற்றியலுகரமாகாதென்றும் அங்ஙனம் ஆசிரியர் பாடங்கொண்டதற்கு ஒரு பயனின்றாமென்றும் (செய். 4-5-12) கூறியதை நோக்கும்பொழுது ஈண்டும் பேராசியர்க்கு நிறைவதுபோல வைத்துப் புணர்க்கப்படும் என்பதே கருத்தாதல் பெறப்படும். ஏனெனில் குற்றியலுகரம் மாத்திரை குறைந்தமைபற்றி மெய்யாக வைத்துப் புணர்க்கப்படுமோ உயிராக வைத்துப் புணர்க்கப்படுமோ என மாணாக்கருக்கு ஓரையம் வரும். அவ் வையத்தை நீக்க உயிர்போல நிறைவதாக வைத்துப் புணர்க்கப்படும் என்பது பொருத்தமாதலின். |