உதாரணம் : நாகுகடிது வரகுகடிது நாகுகடுமை வரகுகடுமை என வரும். இவை தம் அரைமாத்திரை பெற்றன. ஏனையவற்றோடும் ஒட்டுக. |
இனி இது 'மால்யாறு போந்த கால்சுரந்து பாய்ந்து' எனத் தொடர்மொழிக்கண்ணும் அரைமாத்திரை பெற்றது என்னாக்கால் வஞ்சிச்சீரின்றாமாறு உணர்க. |
(3) |
409. | வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை யியற்கை நிலையலு முரித்தே. |
|
இது முன்னின்ற சூத்திரத்தான் அரைமாத்திரைபெறும் என்றதனை விலக்கி 'இடைப்படிற் குறுகு மிடனும்' (எழு - 37) என்றதனான் அரைமாத்திரையினுங் குறுகுமென்று ஆண்டு விதித்தது ஈண்டு வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வருமென்கின்றது. |
இதன் பொருள் : வல்லொற்றுத் தொடர்மொழி - வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரம், வல்லெழுத்து வருவழி - வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து - 'இடைப்படிற் குறுகும்' (எழு - 37) என்பதனாற் கூறிய அரைமாத்திரையினுங் குறுகி நிற்கும் என்ற இயல்பிலே நிற்றலும் உரித்து என்றவாறு. |
உம்மை எதிர்மறை. |
உதாரணம் : கொக்குக்கடிது கொக்குக்கடுமை என அரைமாத்திரையிற் குறைந்தவாறு குரங்குகடிதென்பது முதலியவற்றோடு படுத்துச் செவிகருவியாக உணர்க. |
முன்னின்ற சூத்திரத்து 2உகரநிறையுமென்று பாடம் ஓதி அதற்கு உகரம் அரைமாத்திரையிற் 1சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி இச் சூத்திரத்திற்குப் பழைய அரைமாத்திரை பெற்று நிற்கு மென்று கூறுவாரும் உளர். |
(4) |
|
1. சிறிது மிக்கு நிற்கும் என்பது, குற்றியலுகரம் என்பதனோடு மாறுபடுமாதலிற் பொருந்தாது. |
2. சீர்நிலை கோடற்கண் இவ்வாசிரியரும் நிறையுமென்றாளுப. |