316குற்றியலுகரப்புணரியல்

410.

யகரம் வருவழி யிகரம் குறுகு
முகரக் கிளவி துவரத் தோன்றாது.

 

இது குற்றியலுகரம் புணர்மொழியகத்து வருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : யகரம்  வருவழி உகரக் கிளவி துவரத்தொன்றாது -
யகர    முதன்மொழி    வருமொழியாய்    வருமிடத்து    நிலைமொழிக்
குற்றுகரவெழுத்து  1முற்றத்தோன்றாது,  இகரங்  குறுகும்  -  ஆண்டு  ஓர்
இகரம்வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும் என்றவாறு.
 

உதாரணம் : நாகியாது வரகியாது தெள்கியாது எஃகியாது கொக்கியாது
குரங்கியாது  என  வரும். 'துவர' என்றார், ஆறு  ஈற்றின்கண்ணும் உகரங்
கெடுமென்றற்கு. 
 

(5)
 

411.

ஈரெழுத்துமொழியுமுயிர்த்தொடர்மொழியும்
வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத்
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.

 

இது  முற்கூறிய  ஆறனுள்  முன்னர் நின்ற இரண்டற்கும் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஈரெழுத்து மொழியும்  உயிர்த்தொடர்  மொழியும் -
ஈரெழுத்  தொருமொழிக்  குற்றுகர   ஈற்றிற்கும்  உயிர்த்  தொடர்மொழிக்
குற்றுகர  ஈற்றிற்கும்,  வேற்றுமையாயின்    -    வேற்றுமைப்   பொருட்
புணர்ச்சியாயின்,  இனஒற்று  இடைமிக - இனமாகிய ஒற்று இடையிலேமிக,
வல்லெழுத்த  மிகுதி தோற்றம்  வேண்டும் - வல்லெழுத்து மிகுதி தோன்றி
முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
 

உதாரணம் : யாட்டுக்கால்  செவி  தலை புறம் எனவும், முயிற்றுக்கால்
சினை   தலை   புறம்   எனவும்    வரும்.   கயிற்றுப்புறம்   வயிற்றுத்தீ
என்பனவுமாம். 


1. கெடும் என்பது கருத்து.  குறுகும்  என்பது  இருபொருள்படநின்றது;
என்னை ? தோன்றும் எனவும் மாத்திரையிற் குறுகும் எனவும் இருபொருள்
தரலின்.