414. | வன்றொடர் மொழியு மென்றொடர் மொழியும் வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்றெல்லாம் வல்லொற்றிறுதிகிளையொற்றாகும். |
|
இது பின்னின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் - வன்றொடர்மொழிக் குற்றுகர ஈறும், மென்றொடர்மொழிக் குற்றுகர ஈறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடைமிகும் - வருமொழியாய் வந்த வல்லெழுத்தினது ஒற்று இடையிலே மிக்குமுடியும், மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்றெல்லாம் - அவ்விரண்டனுள் மெல்லொற்றுத் தொடர்மொழிக்கண் நின்ற மெல்லொற்றெல்லாம், இறுதி வல்லொற்று - இறுதிக்கணின்ற வல்லொற்றும், கிளை ஒற்று ஆகும் - கிளையாகிய வல்லொற்றுமாய் முடியும் என்றவாறு. |
1இறுதி வல்லொற்று வருதலாவது குற்றுகரம் ஏறிநின்ற வல்லொற்றுத் தானே முன்னர்வந்து நிற்றலாம். 2கிளைவல்லொற்று வருதலாவது னகாரத்திற்கு டகாரமும் னகாரத்திற்கு றகாரமும் புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாமாதலின், அவை முன்னர் வந்து நிற்றலாம். |
உதாரணம் : கொக்குக்கால் சிறகு தலை புறம், குரங்குக்கால் செவி தலை புறம், குரங்குக்கால் செவி தலை புறம், எட்குக்குட்டி செவி தலை புறம், எற்புக்காடு சுரம் தலை புறம் என வரும். அற்புத்தளை என்பது அன்பினாற் செய்த தளையென வேற்றுமையும் அன்பாகிய தளையென அல்வழியுமாம். |
|
1. இறுதி வல்லொற் றென்பது - உகரமூர்ந்த இறுதி வல்லொற்றை. அவ் வல்லொற்றாக இடையில்நின்ற மெல்லொற்றுத் திரியுமென்றபடி. உதாரணமாகக் குரங்கு என்பதிலுள்ள மெல்லொற்று, குரக்கு என இறுதிநின்ற வல்லொற்றாய்த் திரிதல்காண்க. |
2. கிளையொற் றென்றது - மெல்லொற்றுக் கினமாகிய வல்லொற்றை. உதாரணமாக எண்கு என்புழி ணகரம் எட்கு எனத்தனக்கினமாகிய டகரமாகத் திரிதல் காண்க. பிறவுமன்ன. சிலப்பதிகாரம் என்புழிச் சிலம்பு சிலப்பு என்றாயிற்று. |