உதாரணம் : புன்கங்கோடு செதிள் தோல் பூ எனவும், குருந்தங்கோடு செதிள் தோல் பூ எனவும் வரும். |
வலியாமரப்பெயருமுள எனவே வலிக்கும் மரப்பெயரும் உளவென்று கொள்க. வேப்பங்கோடு கடப்பங்காய் ஈச்சங்குலை என வரும். |
(11) |
417. | ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரு மம்மிடை வரற்கு முரியவை யுளவே யம்மர பொழுகு மொழிவயி னான. |
|
இஃது ஈரெழுத் தொருமொழிக்கும் வன்றொடர் மொழிக்கும் எய்தாத தெய்துவித்தது, முன்னர் எய்தியதனை விலக்கி அம்மு வகுத்தலின். |
இதன் பொருள் : ஈரெழுத்துமொழியும் வல்லொற்றுத் தொடரும் - ஈரெழுத் தொருமொழிக் குற்றியலுகரமும் வன்றொடர்மொழிக் குற்றியலுகரமும், அம்இடை வரற்கும் உரியவை உள - முன் முடித்துப்போந்த முடிபுகளன்றி அம்முச்சாரியை இடையேவந்து முடிதற்கு உரியனவும் உள ; யாண்டெனின், அம்மரபு ஒழுகும் மொழிவயினான - அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து என்றவாறு. |
உதாரணம் : ஏறங்கோள் சூதம்போர் வட்டம்போர் புற்றம் பழஞ்சோறு என வரும். |
உம்மை எதிர்மறையாகலின், அம்முப்பெறாதன நாகுகால் கொக்குக்கால் என முன்னர்க் காட்டினவேயாம். |
அம்மரபொழுகும் என்றதனால் 1அரசக்கன்னி முரசக்கடிப்பு என அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும் அரச வாழ்க்கை முரசவாழ்க்கை என அக்குக்கொடுத்தும் முடிக்க. |
இன்னும் அதனானே இருட்டத்துக்கொண்டான் விளக்கத்துக்கொண்டான் என அத்தும் வல்லெழுத்துங் கொடுத்தும் மயிலாப்பிற்கொற்றன் பறம்பிற்பாரி என இன் கொடுத்துங் கரியதன்கோடு நெடியதன்கோடு என அன் கொடுத்தும் முடிக்க. |
(12) |
|
1. அரசக்கன்னி, முரசக்கடிப்பு இவற்றில் அரசு முரசு என்பன குற்றுகரவீறு. |