சிறப்புப்பாயிரம்17

நிலம்
 

செய்பாங்கு  -  செய்தற்குரிய  தொழிற்பகுதிகள்.  என்றது : எருவிடல்,
உழுதல்  முதலியன.  விளைதல்  வண்மை - விளைந்து பயன்படுதற்கேற்ற
தன்மையுடைமை.  போய்ச்சார்ந்தோர் - உழவர்.  இடுதல் -  தன்பயனைக்
கொடுத்தல்.  எடுத்தல் - அதனாலவரை  யுயர்த்தல்.  இனி,   மாணாக்கன்
செய்த  குற்றத்தைப் பொறுத்தலும், மாணாக்கன் செய்தற்குரிய வழிபாட்டின்
பகுதி    யமைந்தபின்பு,     அவனுக்குத்    தான்     பயன்படுதற்கேற்ற
தன்மையுடையனாதலும்,   மாணாக்கனுக்  கறிவைக் கொடுத்தலும், அதனால்
அவனை   உயர்த்தலுமென  ஆசிரியனுக்குப் பொருந்த வுரைத்துக்கொள்க.
வண்மை - வளத்தன்மை என்றது நிலவளத்தையு மறிவின்வளத்தையும்.
 

பூ
 

சுபகருமங்களுக்  கேற்றதாதலும்,  உரியகாலத்திலே  மலர்தலும், வண்டு
சென்றூத  அதற்குத்  தேனை  உண்ணும்படி  நெகிழ்ந்து கொடுத்தலுமென
வுரைக்க. விழையப்படுதல் - பிறரால் விரும்பப்படுதல்.
 

இனிக் கற்பிக்குங் காலத்தே முகமலர்ந்து கற்பித்தலும், மனம் நெகிழ்ந்து
கற்பித்தலுமென  ஆசிரியனுக்குப்  பொருந்த  வுரைத்துக் கொள்க. ஏனைய
வெளி.
 

துலாக்கோல்
 

மிகினும்  குறையினும்  நில்லாதாகலும்  -  தன்கணிட்ட பொருள்துலாம்
என்னும்       அளவிலும்       மிக்காலும்      குறைந்தாலும்     தன்
சமநிலையினில்லாமையுடையதாகலும்  என்றது  துலாம்  என்னும் அளவுக்கு
மேற்படி உயர்ந்துகாட்டும்; குறையிற்   றாழ்ந்துகாட்டும். எனவே பொருளின்
குறைவையும்  நிறைவையுங்  காட்டும்  என்றபடி. ஐயந்தீர்த்தல் - பொருளி
னளவைக்காட்டி    ஐயந்தீர்த்தல்.     நடுநிலை  -    கொள்வோனுக்குங் கொடுப்போனுக்கும்     நடுநின்று     அளவினுண்மையை    உணர்த்தல்.
மெய்ந்நடுநிலை மெய்யை உணர்த்தி நடுநிற்றலென்க. இனி ஒரு நூலிலேனும்
வினாவப்பட்ட பொருளிலேனும்  குற்றம் மிகுந்தாலும் குறைந்தாலு மம்மிகுதி
குறைவை   யுணர்ந்தவளவில்   நில்லாமல்  உணர்த்திவிடுதலும்,  தன்பால்
வினாவப்பட்ட பொருளி  னையத்தைத்  தீர்த்தலும், வாரம்படாமற் சமமாய்
நிற்றலுமென ஆசிரியனுக்குப் பொருந்த வுரைத்துக்கொள்க.
 

கற்கப்படாதோர்
 

கற்கப்படாதோர்  -  கற்கப்படத்தகாத  ஆசிரியர்.  கழல்  - கழற்காய்.
பெய்தல் - இடுதல். குண்டிகை - குடுக்கை.
 

பொழிப்பு :
 

"பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை
நாடித் திரிபில வாகுதல் பொழிப்பே."
 

பாடம் - மூலபாடம். கண்ணழிவு - பதப்பொருள் கூறல்.
 

மூலபாடமும், கண்ணழிவும், உதாரணமுமாகிய  இவற்றைத்  திரிபிலவாக
ஆராய்ந்து செய்வது பொழிப்புரையாம்.