இதன் பொருள் : உண்டென் கிளவி உண்மை செப்பின் - உண்டென்னுஞ்சொல் வினைக்குறிப்பையுணர்த்தாது ஒருபொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மையாகிய பண்பை உணர்த்தி நிற்குமாயின், முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும் - முன்னர்நின்ற குற்றுகரந் தான் ஏறிநின்ற மெய்யொடுங் கெடுதலும், மேனிலை ஒற்றே ளகார மாதலும் - அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ளகார ஒற்றாதலுமாகிய, ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்து - அம் முறையினையுடைய இரண்டு நிலையும் உரித்து. அஃது உரித்தன்றி முன்னர் நின்ற நிலையிலே கேடுந் திரிபும் இன்றி நிற்றலும் உடைத்து, வல்லெழுத்து வரூஉங் காலை யான - வல்லெழுத்து முதன்மொழியாய் வருங்காலத்து என்றவாறு. |