336குற்றியலுகரப்புணரியல்

இதன் பொருள் : அளந்தறி    கிளவியும்    நிறையின்    கிளவியுந்
தோன்றுங்காலை  -  முற்கூறிய  ஒன்றுமுதல்   ஒன்பான்களின்   முன்னர்
அளந்தறியப்படும்      அளவுப்பெயரும்      நிறைப்பெயரும்     வந்து
தோன்றுங்காலத்து,  கிளந்த  இயல  -  ஆறன்ஈறு  அல்வழிக்  குற்றுகரம்
மெய்யொடுங்கெட்டு   முதலீரெண்ணினொற்று   ரகாரமாய்  உகரம்  வந்து
இடைநிலை ரகரங்கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி நான்கனொற்று
வன்கணத்து றகரமாய் எட்டனொற்று ணகரமாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஒருகலம்  இருகலம்  சாடி தூதை பானை நாழி மண்டை
வட்டி எனவும், ஒருகழஞ்சு  இருகழஞ்சு கஃசு தொடி பலம் எனவும் வரும்.
அகல்  உழக்கு  என்பன  முன்னர்  முடித்தும்.  இவை  முதலீரெண்ணின்
செய்கை.
 

தோன்றுங்காலை     யென்றதனான்     இவ்வெண்ணின்     முன்னர்
எடுத்தோத்தானும்  இலேசானும் முடியாதுநின்ற  எண்ணுப்பெயர்களெல்லாம்
இவ்விதியும்   பிறவிதியும்   எய்துவித்து   முடித்துக்கொள்க.   ஒருமூன்று
ஒருநான்கு  இருமூன்று  இருநான்கு  ஒருகால்   இருகால்  ஒருமுந்திரிகை
இருமுந்திரிகை  ஒருமுக்கால்  இருமுக்கால்  என்பன  பிறவுங் கொணர்ந்து
ஒட்டுக.  இனிப் பிறவிதி  எய்துவன ஓரொன்று  ஓரிரண்டு ஓரைந்து ஓராறு
ஓரேழு ஓரெட்டு ஓரொன்பது எனவும், ஈரொன்று ஈரிரண்டு ஈரைந்து ஈராறு
ஈரேழு ஈரெட்டு  ஈரொன்பது  எனவும், மூவொன்று  மூவிரண்டு மூவைந்து
மூவாறு  மூவேழு  மூவெட்டு மூவொன்பது  எனவும், 1'முதலீ ரெண்ணின்மு
னுயிர்' (எழு - 455)  என்னுஞ் சூத்திரத்தான் உயிர்க்கு எய்திய பிறவிதியும்
'மூன்றன்  முதனிலை  நீடலு  முரித்து'  (எழு - 457)  என்ற  பிறவிதியும்
பெற்றுப்  பிறசெய்கைகளும்  பெற்று  முடிந்தன.  நாலொன்று  நாலிரண்டு
நாலைந்து  நாலாறு  நாலேழு  நாலெட்டு  நாலொன்பது  என்பன 'நான்க
னொற்றே  லகார  மாகும்'  (எழு - 453)  என்ற   விதிபெற்று  முடிந்தன.
பிறவும்   இதுவாறேயன்றி   அளவும்   நிறையுமன்றி   வருவனவெல்லாம்
இவ்விலேசான் முடிக்க.
 

(41)

1. முதலீரெண்ணின்  முன்   உயிர்    [குற் - 50 - ம் சூ.]   மூன்றன்
முதனிலை நீடலு முரித்தே. [குற் - 52 - ம் சூ.]