குற்றியலுகரப்புணரியல்337

447.

மூன்ற னொற்றே வந்த தொக்கும்.
 

இது மேல் மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் :   மூன்றனொற்றே        வந்ததொக்கும்       -
மூன்றாமெண்ணின்கணின்ற னகர ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர்
நிறைப்பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றோடு ஒத்த ஒற்றாய்த் திரிந்து
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : முக்கலம் சாடி  தூதை பானை எனவும், முக்கழஞ்சு கஃசு
தொடி பலம் எனவும் வரும்.
 

'நான்க  னொற்றே   றகார  மாகும்'  (எழு - 442)   என்ற  முன்னை
மாட்டேறு  நிற்றலின்  நாற்கலம்  சாடி தூதை பானை எனவும், நாற்கழஞ்சு
தொடி பலம் எனவும் வரும். 
 

(42)
 

448.

ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் :    ஐந்தனொற்றே      மெல்லெழுத்தாகும்     -
ஐந்தாவதன்கண்  நின்ற  நகர  ஒற்று  வருமொழி  வல்லெழுத்துக்கு  ஏற்ற
மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஐங்கலம் சாடி தூதை பானை எனவும், ஐங்கழஞ்சு தொடி
பலம் எனவும் வரும். ஏகாரம் ஈற்றசை. 
 

(43)
 

449.

கசதப முதன்மொழி வரூஉங் காலை.
 

இது முற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது.
 

இதன் பொருள் :  கசதப   முதன்மொழி    வரூஉங்    காலை   -
மூன்றனொற்று  வந்ததொப்பதூஉம்  ஐந்தனொற்று  மெல்லெழுத்தாவதூஉம்
அவ்வளவுப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன்மொழியாய்
வந்த இடத்து என்றவாறு.