456. | மூன்று நான்கு மைந்தென் கிளவியுந் தோன்றிய வகரத் தியற்கை யாகும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் - மூன்றென்னு மெண்ணும் நான்கென்னு மெண்ணும் ஐந்தென்னு மெண்ணும், தோன்றிய வகரத்து இயற்கையாகும் - முன்னர்த் தோன்றிநின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகர ஒற்றாயும், நான்கின்கண் லகர ஒற்றாயும் ஐந்தின்கண் ஒற்றுக்கெட்டும் முடியும் என்றவாறு. |
உதாரணம் : முவ்வகல் முவ்வுழக்கு என இதற்குத் தோன்றிய என்றதனால் ஒற்றிரட்டுதல் கொள்க. நாலகல் நாலுழக்கு ஐயகல் ஐயுழக்கு என வரும். |
தோன்றிய என்றதனால் மேல் மூன்றென்பது முதல் நீண்ட இடத்து நிலைமொழி னகரவொற்றுக் கெடுத்துக்கொள்க. இயற்கையென்றதனால் தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. 'மூன்றனொற்றே' முதலிய மூன்று சூத்திரமுங்கொணர்ந்து முடிக்க. |
(51) |
457. | மூன்றன் முதனிலை நீடலு முரித்தே யுழக்கென் கிளவி வழக்கத் தான. |
|
இது முன்னர்க் குறுகுமென்றதனை நீண்டு முடிக என்றலின் எய்தியது விலக்கிற்று. |
இதன் பொருள் : மூன்றன் முதனிலை நீடலும் உரித்து - மூன்றென்னு மெண்ணின் முதனின்ற எழுத்து நீண்டுமுடிதலும் உரித்து, அஃதியாண்டெனின், உழக்கு என்கிளவி வழக்கத் தான - உழக்கென்னுஞ் சொன் முடியும் வழக்கிடத்து என்றவாறு. |
உதாரணம் : மூவுழக்கு என வரும். |
வழக்கத்தான என்பதனான் அகலென்கிளவிக்கு முதனிலை நீடலுங் கொள்க. மூவகல் என வரும். இன்னும் அதனானே நிலைமொழி னகர ஒற்றுக் கெடுக்க. |