இதன் பொருள் : ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்று - ஒன்பதென்னு மெண்ணின் முதனின்ற ஒகரம் மேற்பத்தென்பதனோடு புணரும்வழிக் கூறியவாறுபோல ஒரு தகரம் ஒற்றி அதன்மேல் ஏறிமுடியும், முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் - அவ்வொகரத்தின் முன்னின்ற னகர ஒற்று ளகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும், நூறென்கிளவி நகார மெய்கெட ஊ ஆவாகும் இயற்கைத்தென்ப - வருமொழியாகிய நூறென்னுமெண்ணுப்பெயர் நகரமாகிய மெய்கெட அதன்மேல் ஏறிய ஊகாரம் ஆகாரமாம் இயல்பையுடைத்தென்பர் புலவர், ஆயிடை இகர ரகரம் வருதல் - அம்மொழியிடை ஓர் இகரமும் ரகாரமும் வருக, ஈறு மெய்கெடுத்து மகரம் ஒற்றும் - ஈறாகிய குற்றுகரத்தினையும் அஃது ஏறிநின்ற றகர ஒற்றினையும் கெடுத்து ஓர் மகர ஒற்று வந்து முடியும் என்றவாறு. |