வெற்றிலை, வெற்றுப்பிலி, வெற்றடி, வெற்றெனத் தொடுத்தல் என்றாற் போல்வனவற்றுள் ; வெறுவிதாகிய இலை யென்பது பாக்குங் கோட்டுநூறுங் கூடாததாய பண்புணர்த்தி ஈறுதொகுதலின் மருவின் பாத்தியவாய் நின்று ஒற்றடுத்தது. வெறுவிதாகிய உப்பிலியென்றது சிறிதும் உப்பிலியென நின்றது. ஏனையும் அன்ன. இங்ஙனம் ஐம்பாலுந் தொகுத்தற்கு உரிய முதனிலையாதலிற் புணர்த்தலாகாமை கூறினார். |
இனி ஆடரங்கு செய்குன்று புணர்பொழுது அரிவாள் கொல்யானை செல்செலவு என நிலம் முதலாகிய பெயரெச்சந் தொக்க வினைத்தொகைகளை விரிக்குங்கால், ஆடினவரங்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த அகர ஈறு இறப்பு உணர்த்தியும், ஆடாநின்றவரங்கு ஆடுமரங்கு எனச் செய்யு மென்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த உம்மீறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும், அவற்றானாய புடைபெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டுபெயரெச்சமும் ஒருசொற்கண் ஒருங்கு தொக்கு நிற்றலின் அதனை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்க்கலாகாமையிற் புணர்க்கலாகாதென்றார். உம்மிறுதி நிகழ்வும் எதிர்வும் உணர்த்துமாறு 'வினையின் றொகுதி' (சொல் - 415) என்னும் எச்சவியற் சூத்திரத்துட் கூறுதும். இவ்வும் ஈறு இரண்டு காலமும் ஒருங்குணர்த்துதற் சிறப்பு நோக்கிச் செய்த என்பதனை ஆசிரியர் முற்கூறாராயினர். |