செறிப்பச்செறல் என்பதற்கு ஒருவன் சொல்லச் செல்லுதல் என்றும், செறிப்பவருதல் என்பதற்கு மற்றொருவன் சொல்லத் தன் கண் வருதலென்றும் பலரும் சாதாரணமாகக் கூறுவதுண்டு. மற்றொருவன் சொல்ல வருதல் என்பது அவனுக்குச் செறிப்பச் சேறலே யாகலானும், செறிப்பச் சென்ற உருவே மீண்டு வராமையானும், சொல்லச் செல்லலே கருத்தாயின் செறிப்பச்சேற லென்னாது பின் "சொல்லப் பிறந்து சொற்குறுப்பாமோசையை இவர் எழுத்தென்று வேண்டுவர்" எனக் கூறியதுபோல ஈண்டும் சொல்லச்செல்லல் என வெளிப்படையாகக் கூறுவராகலானும், ஆசிரியரும்" எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலை" யென்றே கூறுதலானும், செறிப்ப என்பதற்குச் சொல்ல என்பது நேர்பொருளன்றாகலானும் அவ்வாறு பொருள்கூறல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. பின் வடிவு கூறியதற்கியைய ஈண்டும் செறிப்பச் சேறல் என்பதற்கு குழல் போன்ற ஒன்றனுட் புகுத்த அதனுள்ளே சேறல் என்றும், செறிப்ப வருதல் என்பதற்குக் குடம்போன்ற ஒன்றனுட் புகுத்த அதனுள்ளே புகுந்து உட்புறத்தே தாக்குண்டு மீண்டுவருதல் என்றும் பொருள் கூறலே பொருத்தமாகும் என்பது எமது கருத்து. புகுத்தல் - (அகத்தே சொல்லிப்) புகச்செய்தல். இதுபற்றியே பின்னரும் அகத்துக் கூறல் என்றார். செல்லுதல் வருதல் என்பன உள்ளே செல்லுதலையும் வெளியே வருதலையும் குறித்துநின்றன. இவற்றால் எழுத்திற் குருவுடைமை எங்ஙனம் பெறப்படுமெனின், குழல்போன்றவற்றினுட்புக்கு அவற்று ளடங்கிச் செல்லுதலானும் குடம் போன்றவற்றினுட்புக்கு அவற்றினடியிற் றாக்குண்டு மீளுதலானும் பெறப்படும். என்னை ? உருவுடையதே ஒன்றனுட் புக்குச்செல்வதும் புக்குத் தாக்குண்டு மீளுவது முடைமையின். குழலானும் குடத்தானும் எழுத்துருவின் வரம்புபட்ட பரிணாமமுடைமை பெறப்படுதலான் அதன் வடிவுடைமையும் பெறப்படும். செறித்தல் - உட்புகுத்தல். "கேள்விச் செவியிற் கிழித்துகிற் பஞ்சி - பன்னிச் செறித்து" (பெரு-உஞ்-மரு-136) என்னு மடிகளை நோக்கியுணர்க. இனிச் சேறல் வருதலாகிய வினை யுடைமையானும் உருவுடைமை பெறப்படுமென்க. |
பின்னர் (க சூ+ம்) "எழுத்துக்களி னுருவிற்கு வடிவு கூறாராயினார்............ அவ்வடிவா ராயுமிடத்துப் பெற்ற பெற்ற வடிவே தமக்கு வடிவாம். குழலகத்திற் கூறிற் குழல்வடிவும், குடத்தகத்திற் கூறிற் குடவடிவும், வெள்ளிடையிற் கூறி னெல்லாத்திசையு நீர்த் தரங்கமும்போல" என்று குழல் முதலிய மூன்றிலு மமைந்த உருவிற்கே வடிவமும் காட்டினாராதலின் அம் மூன்றிலும் வைத்தே முன்னர் அவ் வுருவை உணர்த்திப் பின்னர் வடிவிற்கும் அவற்றையே எடுத்துக்காட்டினா ரென்பது சாலப் பொருத்தமாதலின் நச்சினார்க்கினியர்க்கும் இதுவே கருத்தாதல் துணிபாம். என்னை ? உருவின் |