இடையெறியப்படுதலானும் என்பதில் இடையென்பது இடத்தை யுணர்த்திநின்றது. இடம் ஈண்டு வெளியிடம். அது பின் 'வெள்ளிடையிற் கூறின்' என்பதனானும் உணரப்படும். எறியப்படுதல் - வீசப்படுதல். எனவே வெள்ளிடையிற் கூறின் அவ்வெள்ளிடைக்கண் எல்லாத்திசையும் நீர்த்தரங்கமும்போல வீசப்பட்டுச் சேறலானும் என்பது பொருளாம். திரைவீசுங்கால் ஒன்றாலொன்று வீசி எழுப்பப்படுதல் போல, எழுத்தொலியும் ஒன்றாலொன்று வீசி எழுப்பப்படுதலின் "எறியப்பட்டு" என்றார். அதனை "உட்கப்பட்டார்" என்பதுபோலச் செய்வினையாகக் கொள்ளினுமமையும். ஒன்றாலொன்று வீசியெழுப்பப்படுதலின் உருவுடைமை பெறப்படும். அவ்வொலி நீர்த்தரங்கம்போல வட்டவடிவாய்ச் சேறலின் அதன் வடிவுடைமையும் பெறப்படும். எல்லாத்திசையு மென்பது கதம்ப முகுள நியாயத்தையும், நீர்த்தரங்கமென்பது வீசிதரங்க நியாயத்தையும் குறித்து வந்தன. |
வீசிதரங்கநியாயமாவது : ஒரு குளத்தில் நீரிடையே ஒரு கல்லை இட அந்தஇடத்தில் முதலாவதுண்டான திரை தன்னைச்சூழப்பின்னு மோர்திரையை எழுப்ப, அது தன்னைச்சூழப் பின்னுமோர் திரையை யெழுப்ப, இப்படியே கரை சாரும் வரையும் வேறு வேறு திரைகளை எழுப்பிச் சேறல்போல்வதொருமுறை. அதுபோலவே முதலாவ துண்டான எழுத்தொலி, தன் நாற்புறமும் ஒன்றையொன்று சூழ வேறு வேறு ஒலிகளை எழுப்பிச் செல்லும் என்க. இவை முறையே தருக்க சங்கிரகத்தி னுரைக்குரையாகிய நீலகண்டீய உரையின் வியாக்கியானங்களாகிய நிருதமப்பிரகாசிகையிலும், இராமருத்திரீ யத்திலும் கூறப்பட்டுள்ளன. |