அவிழக்கும்போது   இதழ்   முரிந்தும்,   ஒற்றை  புரட்டும்போது  துண்டு துண்டாய்ப்  பறந்தும்,  அறிஞர்கள்   மிகவும்   கவலுதற்குரிய   நிலையிற் காணப்பட்டன.  இத்தகைய  நிலைமையினையடைந்த  ஏட்டுச் சுவடிகளைத் தம்முள்   ஒப்புநோக்கி,   அல்லும்  பகலும்  உழைத்துச்  செப்பஞ்செய்து வெளிப்படுத்துக்  காத்தோம்புதலே  நோன்பென  மேற்கொண்டார்.  இதன் பயனாக,  முதலில்  நீதிநெறிவிளக்கவுரையும்,  பின்னர்  1881-ம்  ஆண்டில் வீரசோழியமும்,  1883இல்  தணிகைப்புராணமும்,  1885இல் தொல்காப்பியம் பொருளதிகாரமும்,      1887இல்        கலித்தொகையும்,      1889இல் இலக்கணவிளக்கமும்,  சூளாமணியும்,   1901இல்   தொல் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியமும்  அடுத்தவாண்டில் தொல்-சொல். நச்சினார்க்கினியமும் அச்செழுத்துச் சுவடியாக நாம் கண்டின்புறக் கிடைத்தன.    | 
தொல்காப்பியமுற்றும்  பதிப்பித்த  தனிச்சிறப்புப்   பிள்ளையவர்கட்கே யுரித்தாதல் கண்டின்புறுக. எழுத்ததிகாரம் முன்னரே மழவை மகாலிங்கையர் அவர்களாற்   பதிப்பிக்கப்பட்ட   தெனினும்,  எஞ்சிய  சிறந்த  பாகங்கள் பிள்ளையவர்களாலேயே  முதன்முதல்  அச்சில்  வெளிப்போந்தன. ஏட்டுச் சுவடிகளிருந்தும்  அவற்றைப் பயின்ற புலவர்களிருந்தும் தங்கள் பட்டத்திற் கிழுக்குண்டாகுமென்  றஞ்சி  அழுத்தெழுத்திற்   பொறித்து   வெளியிடப் பின்னிட்டுக்     கரந்திருந்தனர்.    தாம்பெற்ற    இன்பம்    தமிழுலகம் பெறவேண்டுமென்ற   தலைப்பெரு   நோக்கொன்றேயுடைய   வெற்றிவீரர் பிள்ளையவர்களே  யன்றோ.  யானென்று  முன்வந்து தொல்காப்பியத்தைப் பதிப்பித்தலால்     தமிழன்னைக்குத்    தொன்மையான     இயற்றமிழ்ப் பொன்முடியைச்  சூட்டி  மகிழ்வித்தாராயினர். நட்சத்திரமாலை, ஆதியாகம கீர்த்தனம்,  ஆறாம்  ஏழாம்  வாசக புத்தகங்கள், கட்டகளைக் கலித்துறை, சூளாமணி  வசனம்,  சைவ  மகத்துவம் முதலிய நூல்கள் பிள்ளையவர்கள் தாமாகவெழுதி யச்சியற்றப்பட்டனவாம்.    |