24சிறப்புப்பாயிரம்

சொற்சீரடி - சொற்  சீராலாகிய  வடி  என்றது  அசையாற்  சீர் செய்து
சீராலடியாக்காது, சொற்களையே சீராக வைத்து அடியாக்குவது.
 

கட்டுரைவகையா     னெண்ணொடு    புணர்ந்த    சொற்சீரடியாவது,
கட்டுரைக்கண் வருமாறு போல எண்ணொடு பொருந்தி வருஞ் சொற்சீரடி.
 

வடவேங்கடமும்     தென்குமரியுமென்பது    உம்மை      தொக்குச்
செவ்வெண்ணாய் வடவேங்கடந் தென்குமரி என நின்றது.
 

வழியசைபுணர்ந்த    சொற்சீரடியாவது.   'தனியசையன்றிப்   பலவசை
புணர்க்கப்பட்டு     வருஞ்    சொற்சீரடி'  யென்பர்   நச்சினார்க்கினியர்.
ஆயிடையென்பது  தனியசையன்றிப்  பின்னுமோரசை புணர்க்கப்பட்டவாறு
காண்க.  'ஒரு  சீர்க்கண்ணே  பிறிதுமொரு  சீர்   வரத்   தொடர்வதோர்
அசையைத் தொடுப்ப' தென்பர் இளம்பூரணர்.
 

முட்டடியின்றிக்  குறைவு  சீர்த்தாய சொற்சீரடியென்றது - தூக்குப்பட்டு
முடியுமடியின்றிச் சீர்குறைந்து வருவதை. "தமிழ்கூறு  நல்லுலகத்து" என்பது
நாற்சீரடியாய்  முடியாது  குறைவு  சீர்த்தாய்  முடிதல்  காண்க. இவற்றைக்
"கட்டுரை வகையா னெண்ணொடு புணர்ந்தும்" என்ற செய்யுளியல் 12 - ம்
சூத்திரத்திற்கு   நச்சினார்க்கினியர்   முதலியோர்  உரைத்த உரைநோக்கி
உணர்க.
 

செந்தூக்காவது - நான்கு  சீரும் நிரம்பிவரும் அடி மூன்றுறுப் படக்கிய
பிண்டம் - சூத்திரம்,  ஓத்து,  படலம் என்னும் மூன்றுறுப்பையும் அடக்கிய
நூல். பிண்டம் - திரப்பட்பட்டது.
 

இன்னும்  பாயிரத்துள் "முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி" என்று
பாயிரம்    செய்தார்   கூறுதலானே   உணர்கவென   இயைக்க.  எப்படி
உணர்தலெனின் ? இவ்வாசிரியர் கூறிய அதனையே ஈண்டும் (பாயிரத்துள்)
"முந்துநூல்  கண்டு முறைப்பட வெண்ணி" எனப் பாயிரகாரர் கூறினாரென
உணர்தல்.  முந்துநூல்  கண்டு  முறைப்படவெண்ணித்  தொகுத்தான் என
வழிநூல்   இலக்கணமும்   பெறப்படப்   பாயிரகாரர்  கூறியதற்கு   விதி
செய்யுளியலிலும் மரபியலிலும் தொல்காப்பியர் கூறிய விதியே யென்பதாம்.
 

இந்நூலாசிரியர்   வழிநூல்  செய்தற்கு  விதியாண்டுப் பெற்றா ரெனின்
முதல்வன்   கூறிற்றிலனேனும்   அவன்   நூல்  செய்த  முறையே  தமக்
கிலக்கணமாமென்று  கருதிச்  செய்தாரென்க.  முதல்வன் செய்த முறையே
தமக்கும்   இலக்கணமாகக்கொண்டு   நூல்   செய்தாரெனினும்   ஒருவன்
செய்ததை   மீளவும்   செய்தலாற்  பயனின்றே  யென்னு  மாக்கேபத்தை
நீக்கும்பொருட்டே முறைப்படவெண்ணி யென்றாரென்க.
 

பாயிரம் முற்றிற்று.