நூன்மரபு27

மயக்கம் 'ட ற ல ள' (எழு -23) என்பது முதலாக 'மெய்ந்நிலைசுட்டின்'
(எழு - 30) என்பதீறாகக் கிடந்தனவற்றாற் பெற்றாம்.
 

மொழியாக்கம் 'ஓரெழுத்தொருமொழி' (எழு -45) என்பதனாற் பெற்றாம்,
அவ்வெழுத்துக்களை மொழியாக்கலின்.
 

நிலை 'பன்னீருயிரும்'  (எழு - 59)   'உயிர்மெய்யல்லன'  (எழு - 60)
'உயிர்ஒள'   (எழு - 69)  'ஞணநமன'  (எழு - 78)  என்பன.  இவற்றான்
மொழிக்கு முதலாம் எழுத்தும் ஈறாமெழுத்தும் பெற்றாம்.
 

இனம் 'வல்லெழுத்தென்ப' (எழு - 19) 'மெல்லெழுத்தென்ப' (எழு - 20)
'இடையெழுத்தென்ப'   (எழு  -  21)   'ஒளகாரவிறுவாய்'   (எழு  -  8)
'னகாரவிறுவாய்'  (எழு - 9)   என்பனவற்றாற்   பெற்றாம்.   இவற்றானே
எழுத்துக்கள்  உருவாதலும்  பெற்றாம். இவ்வுருவாகிய  ஓசைக்கு ஆசிரியர்
வடிவு   கூறாமை   உணர்க.  இனி   வரிவடிவு   கூறுங்கால்  மெய்க்கே
பெரும்பான்மையும் வடிவுகூறுமாறு உணர்க.
 

ஒன்று பலவாதல் 'எழுத்தோரன்ன' (எழு - 141) என்பதனாற் பெற்றாம்.
 

திரிந்ததன்றிரிபதுவென்றல் 'தகரம்     வருவழி'    (எழு   -   369)
என்பதனானும் பிறாண்டும் பெற்றாம்.
 

பிறிதென்றல் 'மகரவிறுதி'   (எழு - 310)  'னகாரவிறுதி'  (எழு - 332)
என்பனவற்றாற் பெற்றாம்.
 

அதுவும்பிறிதுமென்றல் 'ஆறனுருபி     னகரக்கிளவி'   (எழு  -  115)
என்பதனாற் பெற்றாம்.
 

நிலையிற்றென்றல்  'நிறுத்தசொல்லினீறாகு'  (எழு - 108)  என்பதனாற்
பெற்றாம்.
 

நிலையாதென்றல்  நிலைமொழியது  ஈற்றுக்கண்ணின்றும் வருமொழியது
முதற்கண்ணின்றும்  புணர்ச்சி  தம்முள் இலவாதல். அது 'மருவின்றொகுதி'
(எழு - 111) என்பதனாற் பெற்றாம்.
 

நிலையிற்றும்   நிலையாதுமென்றல் 'குறியதன் முன்னரும்' (எழு - 226)
என்பதனாற்  கூறிய  அகரம் 'இராவென்கிளவிக் ககரமில்லை' (எழு - 227)
என்பதனாற் பெற்றாம்.