வேண்டியதை 'வெரிந்' என்றதனானே திரிந்ததன் றிரிபு அதுவென்பதும், முழுதும் கெடுவழி' என்றதனாலே பிறிதென்பதும் தோன்றக் கூறியமையானே அதுவும், திரிந்ததன் றிரிபு அதுவும் பிறிதும் என்றலாம். இன்னும், இத்திரிபுகள் பிறவாறு வருவனவுளவேனு மறிந்துகொள்க. |
நிலையிற்றென்றல் என்றது - நிலைமொழியும் வருமொழியும் பொருட்பொருத்தமுறப் புணரும் தழுவுதொடர்ப்புணர்ச்சி விதிகளை. 'பொற்குடம்' என்பதுபோல வருந் தொடர்மொழிகளில் நிலைமொழியும் வருமொழியும் பொருட்பொருத்தமுற ஒன்றை ஒன்று தழுவிப் புணர்ந்து நிற்றலின் ஆண்டுக் கூறுஞ் செய்கை என்றும் நிலையுடைமையின் நிலையிற்றென்றல் என்றார். பதச்சேதகாலத்துந் நிலைத்தலானே நிலையிற்றென்றார். |
நிலையாதென்றல் என்றது - நிலைமொழியும் வருமொழியும் பொருட்பொருத்தமுறப் புணராத புணர்ச்சி விதிகளை. முன்றில் என்பதுபோல வரும் தொடர்மொழிகளில் நிலைமொழியும் வருமொழியும் பொருட்பொருத்தமுற ஒன்றை ஒன்று தழுவிப் புணர்ந்து நில்லாமையின் [முன்றில் என்பது இல் முன் எனப்பொருள் கொள்ளுங்கால் நிலைமொழியும் வருமொழியுந் தம்முள் இயையாமையின்] ஆண்டுக் கூறுஞ் செய்கை என்றும் நிலையாமையின் நிலையாதென்றல் என்றார். "மாயிரு மருப்பிற் பரலவ லடைய இரலைதெறிப்ப" என்பதிலும் மருப்பின் என்பது பரலோடியையாது இரலையோடியைதலின் அங்ஙனம் இயையுங்கால் ஆண்டு னகரம் றகரமாயத் திரிந்த செய்கை நிலைபெறாமையின் [இலவாதலின்] அதுபோல்வனவும் அன்னவேயாம். இதனை "மருவின் றொகுதி மயங்கியன் மொழியு - முரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே" என்னும் [எழு-111] சூத்திரஉரை நோக்கி உணர்க. பதச்சேத காலத்தும் அந்நுவயகாலத்தும் நிலையாமையானே நிலையாதென்றார். |
நிலையிற்றும் நிலையாதுமென்றல் - ஓரிடத்தில் பெற்ற புணர்ச்சி நிலை அதுபோன்ற வேறோரிடத்தில் நிலைபெறாதென்றல். அது 'பலாஅக்கோடு' எனக் குறியதன் முன்னர் நின்ற ஆகாரவீறு பெற்ற அகரத்தை அதுபோன்ற இராவென்கிளவி பெறாதென விலக்கல் போல்வன. குறியதன் முன்னர் நின்ற ஆகாரவீறு அகரம் பெறும் என்ற இப்புணர்ச்சி விதி பலா முதலிய ஆகாரவீற்றில் நிலை பெற்றும் அதுவே ஈறாய இராவென்கிளவியில் நிலைபெறாதும் வருதலின் நிலையிற்றும் நிலையாது மென்றல் என்றார். |
கருவி |
கருவி - செய்கைக்குரிய கருவி. இக் கருவி செய்கைக்கு நேரே கருவியாவதும் பரம்பரையாற் கருவியாவதும் என இருவகைத்து. அகக்கருவியும் அகப்புறக்கருவியும் நேரே கருவியாவன. ஏனைய |