பரையாற் கருவியாதல் காண்க. கருவியொன்றே அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனச் செய்கை நோக்கி நான்காக வகுக்கப்பட்டது. |
செய்கை |
இனிச் செய்கை நான்கனுள் அகச்செய்கையாவது - நிலைமொழியீறு இன்ன இன்னவாறு முடியுமெனக் கூறுவது. அது பொற்குடம் என்றாற்போல்வது. இது ஈற்றெழுத்துக்கள் படுஞ் செய்கை விதியாதலின் அகமாயிற்று. இதுபற்றியே தொகை மரபு முதலிய ஓத்தினுள் இன்னஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லா மகச்செய்கையென்றார் உரைகாரர்.செய்கை யோத்துக்களை அகத்தோத்தென்பதும் இதுபற்றியேயாம். |
அகப்புறச்செய்கையாவது - நிலைமொழியீறு பெறும் முடிபன்றி நிலைமொழியீறு பெற்று வரும் எழுத்து முதலியவற்றின் முடிபு கூறுவது. அது புள்ளியீற்றுகள் உகரம் பெறுமென விதித்த புள்ளியீறுகள் பின் அவ்வுகரம் பெறாவென விலக்குதல்போல்வன. இது ஈற்றெழுத்தின் விதியின்றி ஈற்றெழுத்துப்பெற்று வரும் எழுத்தைப் பற்றிய விதியாதலின் அகப்புறமாயிற்று. இதுபற்றியே "உகரமொடு புணரும் புள்ளி யிறுதி - எகரமு முயிரும் வருவழி யியற்கை" என்றாற் போல்வன அகப்புறச் செய்கை என்றார் உரைகாரர். "வேற்றுமைக் குக்கெட வகரம் நிலையும்" எனவும் "இராவென் கிளவிக் ககர மில்லை" எனவும் வருவனவுமவை. |
புறச்செய்கையாவது - வருமொழிச்செய்கை கூறுவது. இது நிலைமொழிச் செய்கையன்றி வருமொழிச் செய்கையாதலின் புறச்செய்கையாயிற்று. அது பொன்னரிது, பொன்றீது என்றாற்போல வருவது. இதுபற்றியே "லளவென வரூஉம் புள்ளி முன்னர்த் - தனவென வரிற் றனவா கும்மே" என்றாற்போல்வன புறச்செய்கையென்றார் உரைகாரர். |
புறப்புறச் செய்கையாவது - நிலைமொழியீறும் வருமொழி முதலும் செய்கைபெறாது நிற்ப அவ்விரண்டையும் பொருந்துதற்கு இடையில் உடம்படுமெய்போன்ற ஓரெழுத்து வருவது போல்வது. அது 'தீயழகிது' என்றாற் போல்வது. இதுபற்றியே "எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே - யுடம்படு மெய்யி னுருவுகொளல் வரையார்" என்றாற் போல்வன புறப்புறச்செய்கை யென்றா ருரைகாரர். |
நிலைமொழி யீறுபற்றி வருவதை அகச்செய்கையென்றும்,அவ்வீறுபற்றாது அவ்வீறு பெற்றுவரும் எழுத்தைப்பற்றி வருவது அவ்வீற்றுக்குப் புறமாதலின் அதனை அகப்புறமென்றும், வருமொழிச் செய்கைபற்றி வருஞ்செய்கை நிலைமொழியீறும் அது பெற்றுவரும் எழுத்தும் பற்றிவருஞ் செய்கையன்றி, அவற்றிற்குப் புறமாதலின் அதனைப் புறச்செய்கை யென்றும், நிலைமொழியீறும் வருமொழி முதலும் பற்றாதுவருஞ் செய்கை அவ்விரண்டற்கும் புறமாதலின் அதனைப் புறப்புறமென்றும் கூறினர் என்க. |