உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன்றாகலின். எழுத்தியல்தழா ஓசைகள்போலக் கொள்ளினுங் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயா மென்றார். இதனைப் புள்ளிவடிவிற்றெனவே ஏனையெழுத்துக்க ளெல்லாம் வரிவடிவினவாதல் பெற்றாம். |
முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படுப, முப்பஃதென்ப எனவே, சார்ந்து வரன் மரபின் மூன்றுமே சிறந்தன, ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்திலவெனவும் பொருடந்து நிற்றலின் அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்குமென்றற்கு எழுத்தோரன்ன என்றார். |
இப்பெயர்களே பெயர். இம்முறையே முறை. தொகையும் மூன்றே. இம்மூன்ற பெயரும் பண்புத்தொகை. |
'அவைதாம்', 'ஆய்தமென்ற' என்பன சொற்சீரடி. |
(2) |
|
என்னுந் திருக்கோவையார்ச் செய்யுளடிக்குச் சிலேடைப் பொருள் கொள்ளும்பொழுது முத்து என்றும் முத்தி என்றும் பொருள் கொள்ளப்படும். கொள்ளுங்கால் முத்தி என்பதிலுள்ள இகரத்தைக் குற்றியலிகரமாகக் கொண்டு முத்து என்றும் முற்றியலிகரமாகக் கொண்டு முத்தி என்றும் பொருள் கொள்ளப்படுதலினாலே குற்றியலிகரம் முற்றியலிகரம் என்னும் இரண்டற்கும் உள்ள பொருள் வேற்றுமை நன்கறியப்படுதல் காண்க. |
காது - நேர்புஅசை. வரகு - நிரைபுஅசை. நடுவுவாங்கி யிட்டெழுதல் ஃ இப்படிப் புள்ளியிடாமல் ஃ இப்படி உள்வளைத்திட்டெழுதல். நடுவு - உள். வாங்கல் - வளைத்தல். எழுத்தியல் தழாஅ ஓசை - கடலொலி சங்கொலி போல்வன. முன்னின்ற சூத்திரமென்றது முதலாஞ் சூத்திரத்தை. |
இச்சூத்திரத்துக்கு இவ்வாறு பொருள்கொள்ளாது பேராசிரியர் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஆய்தமுமென்ற முப்பாற் புள்ளியெழுத்துக்களும் என்று பொருள் கூறுவர். அதனை வாராததனால் வந்தது முடித்தல் என்னும் உத்தி உரையுள் இச்சூத்திரத்தை எடுத்துக்காட்டி இம்மூன்றும் புள்ளியெழுத்துக்க ளென்று அவர் கூறுதலானறிந்து கொள்க. இவரைத் தழுவிச் சிவஞான முனிவரும் தொல் - சூத்திர விருத்தியுள் இவ்வாறு கூறுவர். குற்றியலுகரமும் குற்றியலிகரமும் அக்காலத்துப் புள்ளிபெற்று வழங்கியதென்பது "குற்றியலிகரமுங் குற்றிய லுகரமு, மற்றவை தாமே புள்ளி பெறுமே" என்னும் சங்க யாப்புச் சூத்திரத்தானு மறியப்படும். [யாப் - விருத்தி - 27-ம் பக்கம்]. |