3. | அவற்றுள், அ இ உ எ ஒ என்னும் மப்பா லைந்து மோரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப |
|
இது முற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு அளவுங் குறியும் உணர்த்துதனுதலிற்று. |
இதன் பொருள் : அவற்றுள் - முற்கூறிய முப்பதெழுத்தினுள், அ-இ-உ-எ-ஒ என்னும் அப்பாலைந்தும் - அகர இகர உகர எகர ஒகரம் என்று கூறப்படும் அப்பகுதி களைந்தும், ஓரளபு இசைக்குங் குற்றெழுத்தென்ப - ஒரோவென்று ஓரளபாக ஒலிக்குங் குற்றெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் ; என்றவாறு |
இக்காரணப்பெயர் மேல் ஆளுமாறு ஆண்டு உணர்க. |
1தமக்கு இனமாயவற்றின்க ணல்லது குறுமை நெடுமை கொள்ளப்படாமையின், அளவிற்பட்டு அமைந்தனவாங் குற்றெழுத்திற்குறுகி மெய் அரைமாத்திரைபெற்றதேனுங் குற்றெழுத்து எனப் பெயர் பெறாதாயிற்று. ஒரு மாத்திரை பெற்றமெய் தமக்கு இனமாக இன்மையின். குற்றெழுத்தென்பது பண்புத்தொகை. |
2இனி இசைப்பதும் இசையும் வேறாக உணரற்க, அது பொருட்டன்மை. |
'அவற்றுள்' 'அ-இ-உ' என்பன சொற்சீரடி. |
(3) |
|
1. இரண்டு மாத்திரை பெற்ற எழுத்தை நோக்கி ஒரு மாத்திரை பெற்ற எழுத்துக் குற்றெழுத்தெனப்பட்டாற்போல, ஒரு மாத்திரை பெற்ற குற்றெழுத்தை நோக்கி அரை மாத்திரை பெற்ற மெய்யெழுத்தும் குற்றெழுத் தெனப்படலாமேயெனின்? தமக்கினமாயவற்றின்கண்ணன்றே குறுமை நெடுமை கொள்வது ; அக் குற்றெழுத்துத் தமக் கினமல்லாமையின் அங்ஙனம் கூறப்படாதாயிற்று. அன்றியும் ஒரு மாத்திரை பெற்ற மெய்கள் தமக்கினமாக இருப்பினும் அரை மாத்திரை பெற்ற மெய்களாகிய தாம் குற்றெழுத் தெனப்படலாம். அதுவு மின்மையின் குற்றெழுத்தெனப்படாவாயின என்றபடி. |
2. இசைப்பது - எழுத்து. இசை - ஒலி. அது பொருட்டன்மையென்றது - அந்த இசை பொருளின் குணமென்றபடி. இங்கே பொருள் எழுத்து. அதன் குணம் ஒலி என்பதாம். எனவே எழுத்து வேறு இசை வேறு என்று உணரற்க என்றபடி. ஏன் அவ்வாறு கூறினாரெனின் ஓரளபிசைக்குங் குற்றெழுத்தென இசையை வேறாகவும் எழுத்தை வேறாகவும் ஆசிரியர் கூறியதனால் என்க. |