மணிய சாஸ்திரியாரும் தத்தமாராய்ச்சியிற் கூறுகின்றனர். இராமாயண நூல்களானே ஸ்ரீராமன் காலத்திலே இடைச்சங்க மிருந்ததாக அறியப்படுதலினாலும், முத்தமிழ் நூல்களும் சங்கப் புலவர்கள் செய்தார்கள் என்பது, இறையனார் களவியலுரையானும், சிலப்பதிகார உரைமுதலியவற்றானும் அறியப்படுதலினாலும், கிறிஸ்துவுக்குமுன் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டதென்பதும், பின் செய்யப்பட்டதென்பதும் எவ்வாறு பொருந்தும். அன்றியும் "ஐந்திர நிறைந்த தொல்காப்பியனென" த் தொல்காப்பியப் பாயிரங் கூறலின், ஐந்திரம் வழங்கிய காலத்திலேயே, வடமொழியிலேயே இசைநூல்களும் நாடகநூல்களும் இருந்து இறந்துபட்டிருக்கலாமாதலானும் பின்னுள்ள வடமொழி நூல்களைக்கொண்டு கால நிச்சயஞ் செய்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. | இனித் தொல்காப்பியத்திலும், அதனுரையிலும் காணப்படும் தான், பேன், கோன், அழான், புழான் முதலிய இயற்பெயர்களும், "சுட்டுச்சினை நீடிய இகரவிறுதிக் குரிய" அதோளி, இதோளி, உதோளி முதலிய உதாரணச் சொற்களும் பிற்காலத்தில்வீழ்ந்தமை கொண்டும், இது மிகப் பழைய நூலென்பதறியப்படும். கடைச்சங்க நூலாகிய கலித்தொகையிலே இதோளி என்னுஞ் சொன்மாத்திரம் ஈதோளி என நீட்டல் விகாரத்துடன் காணப்படுகின்றது. அதனாலும் இதன் தொன்மை யறியப்படும். | புன்னாலைக்கட்டுவன், கர-தை-1. | சி.கணேசையர், |
|
|