முதற்பதிப்பின்
 

உரைவிளக்கக் குறிப்பின் முகவுரை
 

இந்நூற்  பதிப்பாசிரியர்  ஸ்ரீமாந் நா. பொன்னையா  அவர்கள்  சென்ற
வைகாசித்       திங்களில்      எம்மிடம்      வந்து,      ராவ்பகதூர்
சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள்    பதித்த   நூல்களுட்   சிலவற்றை
அவர்கள்  பெயரை  ஞாபகப்படுத்தும்  பொருட்டுத் தாம்  பதிப்பதாகவும்,
அவைகளுள்,  தொல்காப்பியம்  எழுத்ததிகாரம்  நச்சினார்க்கினியருரையே
முன்னர்ப்   பதிப்பதாகவும்,   அந்  நச்சினார்க்கினியருரைக்குத்  தாங்கள்
விரிவான  ஒரு விளக்கவுரை எழுதி உதவினால் அதனை நச்சினார்க்கினியர்
உரையோடு    சேர்த்து யாம்   பதிப்பேமென்பதாகவுஞ்   சொன்னார்கள்.
அப்பொழுது   இதுவே,  யாம்   எழுதிவைத்த   பழைய   விளக்கவுரைக்
குறிப்புக்கள்  வெளிவந்து  தமிழ்  மக்களுக்கு மரபு மரபாகப் பயன்படுதற்கு
ஏற்ற  காலம் என்று கருதி, அவர்களை நோக்கி, உடம்பு நலமில்லாமையால்
தாங்கள்   விரும்பியவாறு   புதிதாகவும்  விரிவாகவும்  ஒரு  விளக்கவுரை
எழுதுதல்     எமக்கு     முடியாது;     நச்சினார்க்கினியர்    உரையில்
விளங்காதவற்றிற்குயாம்  முன்  எழுதிவைத்த  சில குறிப்புக்களிருக்கின்றன;
அவற்றைத்  தருகின்றேம்;   தாங்கள்   கொண்டுபோய்   அவ்வுரையோடு
அச்சிட்டு  வெளிப்படுத்தித்  தமிழ் மக்களுக்குப் பயன்படுத்துக என்று கூறி,
அவற்றை அவர்களிடம் கொடுத்தேம். அவையே இவையாம்.
 

இவ்  விளக்கவுரைக்  குறிப்புக்கள்,  யாம்  படிக்குங்  காலத்தில்  எமது
ஆசிரியர்களாகிய     வித்துவசிரோமணி    ந. ச.  பொன்னம்பலபிள்ளை,
சுன்னாகம்,   அ. குமாரசுவாமிப்   புலவர்    என்பவர்களிடங்   கேட்டுக்
குறித்தனவும், யாம்  படிப்பிக்குங்  காலத்திற்  பலமுறை யாராய்ந்து குறித்து
வைத்தனவுமாகும்.
 

இவ் விளக்கவுரைக்  குறிப்புக்கள்  நச்சினார்க்கினிய  ருரையில் அதிகம்
புலப்படா      தவற்றிற்கே     எழுதப்பட்டுள்ளன.     சில    பகுதிகள்
விளங்கற்கரியனவாயினு   மவற்றை,   அவர்    உதாரணமாகக்   காட்டிய
சூத்திரங்களையும்,  உதாரணங்களையும்,  அவருரைப்  போக்கையும், நன்கு
ஆராய்ந்து விளக்கி