இதன் பொருள் : குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே - குற்றியலுகரம் வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து, நெட்டெழுத்திம்பருந் தொடர்மொழி ஈற்றும் - நெட்டெழுத்தின் பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியினும் நிற்றல் வேண்டும் ஆசிரியன் என்றவாறு. |
1நெட்டெழுத்தினது பின் தொடர்மொழியினது ஈறென நிலத்ததகலம்போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றது, அம் மொழியிற் றீர்ந்து குற்றியலுகரம் நில்லாமையின். வல்லாறு பண்புத்தொகை. முற்றும்மை தொக்குநின்றது. அதிகார முறைமை யென்னும் உத்தியான் நிற்றல்வேண்டு மென்பது வருவிக்க. |
உதாரணம் : நாகு வரகு தெள்கு எஃகு கொக்கு குரங்கு என வரும். இவ்வறுவகையும் இடம் ; வல்லெழுத்துப் பற்றுக்கோடு. எனவே, மொழிக்கு ஈறாதலும் பெற்றாம். பெருமுரசு, திருமுரசு என்பன இருமொழிக்கண் வந்த முற்றுகரம். பரசு 2இங்கு ஏது என்பன முற்றுகரவீறாகிய வடமொழிச்சிதைவு. தருக்கு அணுக்கு என்பன வினைக்கண்வந்த முற்றுகரம். குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறிமுடிய அரைமாத்திரையாய் நிற்றலும்,முற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடியாமையுந் தம்முள் வேற்றுமை. |
(3) |
|
1. நெட்டெழுத்தினது இம்பர் தொடர்மொழியினது ஈறு என்பவைகள் நிலத்ததகலம் போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றன என்றது - நிலத்ததகலம் என்புழி நிலத்தைவிட அகலம் வேறன்றாகி நிலத்துளடங்கும். அதுபோல நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழி யீற்றும் வல்லா றூர்ந்துவரு முகரம் நெட்டெழுத்தையும் தொடர் மொழியையும் விட்டுத் தான் வேறாய் நின்று குற்றியலுகரமாவதன்று; அவற்றோடு ஒன்றுபட்டு நின்றே குற்றியலுகரமாகு மென்றபடி. அதிகார முறையாவது, அதிகாரப்பட்டு வருமுறைமையாற் கொள்வது. அதனாற் கோடலாவது, ஈண்டுச் சார்பெழுத்தின் இலக்கணமே அதிகாரப்பட்டு வந்தமையின் சார்பெழுத்தாகிய குற்றியலிகரத்துக்குக் கூறிய 'நிற்றல் வேண்டும்' என்பதை இதற்கும் வருவித்துக்கொள்ளல். இதழ் குவித்துச் சொல்வது முற்றுகரம் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. அதுபற்றிப் பெருமுரசு முதலியவற்றை முற்றுகரமென்றார். பெருமுரசு, திருமுரசு என்பன இருமொழிக்கண் வந்த குற்றுகரமென்பது மஹாலிங்கையர் பதிப்பு. |
2. இங்கு - பெருங்காயம். |