யுள்ளேம். குறிப்புள் விளக்காதன அரும்பத விளக்க முதலியன என்பதன்கண்ணும் விளக்கப்பட்டுள்ளன. |
யாமெழுதிய இக்குறிப்புக்க ளெல்லாந் திருத்தமுடையன வென்று எம்மாற் சொல்லுதல் கூடாது. ஏனெனில், முற்கணத்து எமக்குச் சரியாகத் தோன்றியதே பிற்கணத்துப் பிழையாகத் தோன்றுகின்றதாகலின். ஆதலால் இவற்றுள் வரும் பிழையைப் பேரறிஞர் திருத்திக்கொள்வார்களாக. அன்றியும் இவற்றுள் தாங்கண்ட பிழைகளை நேரே எமக்கு அறிவிப்பின் அவற்றை நோக்கி உண்மையென்று கண்டவற்றை அவர்கள் பெயருடனே இரண்டாவது பதிப்பில் வெளியிடுவேம். அதற்கு ஒருபோதும் நாணமாட்டேம். ஏனெனில், சிற்றறிவையே இயற்கையாகவுடைய மக்களுள் யாமும் ஒருவேமாதலின். |
இன்னும் இக்குறிப்புக்களை யாராய்ந்து பிழைகளை எமக்கு அறிவிக்குங்கால், அடிப்பட்டு வந்தமையால் உண்மையாகத் தோன்றுந் தமது கருத்தினையே உண்மை எனக் கொண்டு, புதிதாகக் காணப்படும் எங் கருத்தினை இது பிழையென இகழாது எங்கருத்தினையு நன்கு நோக்கி எதுவுண்மையென ஆராய்ந்து உண்மையான பிழைகளையே அறிவிப்பதும் பேரறிஞர் கடனாகும். அங்ஙன மறிவிக்குங்கா லிக்குறிப்புத் திருத்தமுற்றுத் தமிழ்மக்களுக்கு மரபு மரபாகப் பயன்படு மென்பதற் கையமேயில்லை. |
இவ்வுரைக் குறிப்பிலே சிற்சிலவிடங்களில் எமது அபிப்பிராயமான உரைகளும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து பொருத்தமாயிற் கொள்ளுமாறும், அன்றேற் றள்ளுமாறும் பேரறிஞர்களை வேண்டிக்கொள்ளுகின்றேம். |
எமக்கு உதவியாளரா யிருந்து யாமெழுதிய இக்குறிப்புக்களைப் பலமுறை படித்துப்பார்த்து, எமது மறதி முதலியவற்றால் நேர்ந்த பிழைகளை எமக்கு அறிவித்தும் சில திருத்தியும் பலவாறு துணை புரிந்த, திருநெல்வேலி ஆசிரியர்கலாசாலைத் தமிழாசிரியரும், சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களுக்கு மாணாக்கரும், பண்டிதருமாகிய ஸ்ரீமத் சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் எமது பேரன்பு என்றும் உரியதாகுக. |