மொழிமரபு73

புகாஅர்த்து   விராஅயது   என்பனவாம். 1கட்டளைகொள்ளா   ஆசிரியர்
இவற்றைத்   தனிநிலை   முதனிலை   இடைநிலை   இறுதிநிலையென்றும்
அடக்குப. இனி  மொழியென்றதற்குத்  தனிநிலை ஏழனையுமே கொள்ளின்,
ஒழிந்த இயற்சீர்ப்பாற்படும் அளபெடைகோடற்கு இடமின்மை உணர்க.
 

(8)
 

42.

ஐஒள வென்னு மாயீ ரெழுத்திற்
கிகர வுகர மிசைநிறை வாகும்.
 

இஃது ஒத்தகுற்றெழுத்து இல்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது.
 

இதுவும் எதிரது போற்றல்.
 

இதன் பொருள் : ஐஒள   என்னும்   ஆயீரெழுத்திற்கு  -   தமக்கு
இனமில்லாத  ஐகார  ஒளகாரமென்று கூறப்படும் அவ்விரண்டெழுத்திற்கும்,
இகர  உகரம்  இசைநிறைவாகும் - ஈகார  ஊகாரங்கட்கு  இனமாகிய இகர
உகரங்களைச்  சார்த்திக்கூற,  அவை  அக்  குன்றிசைமொழிக்கண் நின்று
ஓசையை நிறைப்பனவாம் என்றவாறு.
 

ஐஇ   ஒளஉ  என  நிரனிறையாகக்  கொள்க.  இவற்றை   முற்கூறிய
இயற்சீரெட்டிற்கும் ஏற்பனவற்றோடு உதாரணங் காட்டிக்கொள்க.
 

இத்துணையும் நூன்மரபின் ஒழிபு.
 

(9)
 

43.

நெட்டெழுத் தேழே
யோரெழுத் தொருமொழி. 
 

இஃது     ஓரெழுத்தொருமொழி     உணர்த்துதல்    நுதலியவற்றுள்
நெட்டெழுத்தானாம் மொழியாக்கங் கூறுகின்றது.
 

இதன் பொருள் : நெட்டெழுத்து    ஏழே   -    நெட்டெழுத்தாகிய
உயிர்களேழும், ஓரெழுத்தொருமொழி  - ஓரெழுத்தானாகும் ஒருமொழியாம்
என்றவாறு.


1. கட்டளைகொள்ளா   ஆசிரியர்  என்றது,  கட்டளை  யடிகொள்ளாத
ஆசிரியர்  என்றபடி. கட்டளை யடியென்றது, எழுத்தெண்ணிவகுக்குமடியை.
ஒழிந்த   இயற்சீர்  என்றது,  நேர்நேர்  அல்லாத  இயற்சீர்களை. அவை
நிரைநேர் முதலிய ஏழு.