மாத்திரை பெற்று மிக்குநிற்கும் என்றமையான், எதிரது போற்றலென்னும் உத்திபற்றிச் செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று, ஈண்டுக் கூறினார், நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்துவருமென்பது அறிவித்தற்கு. | அளபென்று மாத்திரையைக் கூறாது அளவெனச் சூத்திரஞ் செய்தமையான் அளவு தொழின்மேனின்றது. அது செய்யுளியலுள் 'மாத்திரையளவும்' (செய்யுளியல் - 2) என்பதனானும் உணர்க. இயலவென்றதனைச் செயவெனெச்சமாக்கிப் படுத்தலோசையாற் கூறுக. | இனித் தன்னினமுடித்தலென்பதனான் ஒற்றிற்கும் இவ்வாறே கொள்க. 'குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' (அகம் - 4) என்ற குறுஞ்சீர்வண்ணத்திற்கு உரிய குற்றெழுத் துக்களெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்தை மாத்திரை மிகுத்தற்குக் கூடிநின்றவாறு உணர்க. எனவே, குற்றெழுத்துக்களெல்லாம் ஒற்றெழுத்துக்களோடும் நெட்டெழுத்துக்க ளோடுங் கூடி அவற்றையே ஓசைமிகுத்து நிற்கும் என்றவாறாயிற்று. இதனானே ஒற்றிசை நீடலுமென்ற ஒற்றிசை நீளுங்காற் குற்றெழுத்தாய் நீளுமென்றார். இனி உரையாசிரியர் புகர் புகழ் எனக் குறிலிணைக்கீழ் ரகார ழகாரங்கள் வந்த தொடர்மொழிகளெல்லாந் தார் தாழ் என்றாற்போல ஓசை யொத்து நெட்டெழுத்தின் தன்மையவாம் என்றாராலெனின், |
| மிகுதற்குக் குற்றெழுத்துக்கள் அவற்றோடு கூடிநிற்குமென்று கருத்துக் கொள்கின்றனர். இதற்கு முன்னுள்ள சூத்திரங்கள் மொழிக் கண் எழுத்துக்கள் மயங்குமாறு கூறி அதிகாரப்பட்டு நிற்றலானும் பின்னுள்ள சூத்திரமும் மயக்கமே கூறலானும், நச்சினார்க்கினியர் கூறியவாறு செய்யுள்கள் தத்தம் இசைபெறும்பொருட்டுக் குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்துக்களோடுகூடி அவற்றினோசையை மிகுத்து நிற்கும் என்று பொருள்பட வந்ததாகக் கோடலினும் மயக்கம்பற்றி வந்ததோ ரையமறுக்க வந்ததாகக் கோடலே பொருத்தமாதலின் இச் சூத்திரத்திற்கு உரையாசிரியர் உரையே பொருத்தமாகும். உயிரெழுத்துக்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலின், தொடர்மொழிக்கீழ் [அஃதாவது புகர் புகழ் என்பனவற்றின் கீழ்] நின்ற ரகர ழகரங்களெல்லாம் நெடிற்கீழ் நின்ற ரகர ழகரங்களின் இயல்பை யுடையனவென்று கொள்ளப்படுமென்பது உரையாசிரியர் உரை. இங்கே நெட்டெழுத்தின் இயல்புடைய என்றது, புகர் புகழ் என்பன குறிலிணைக் கீழ் நிற்பினும், கார் காழ் என்னும் |
|
|