முதலறி கிளவியாகிய பெயர்க்குப் பெயராயிற்று. அத்தன்மையன் அத்தன்மையான், அன்னான், அனையான் என வருவன. ஏனைச் சுட்டோடும் ஒட்டிக்கொள்க. இவை உவமை குறியாது முன்னம் சில குணத்தையடுத்து அத்தன்மையான் எனப் பண்பு குறித்து வரும். ‘அவை முதலாகிய பெண்டென் கிளவி’ என்பது சுட்டெழுத்தை முதலாக உடையவாகிப் பெண்மை உணரவரும் சொல். அத்தன்மையன், அத்தன்மையாள், அன்னாள், அனையாள் என்பன. ‘ஒப்பொடு வரூஉங் கிளவி’ உவமிக்கப் படும் பொருளோடு அடுத்துவரும் பெயர். கண்ணன்னான், கண்போல்வான், பொன்னனையான். குரங்கன், குரங்கி என்பனவும் அவை. அஃதேல், அன்னார், அனையார் எனச் சுட்டு முதலாகிய பன்மை உணரவரும் பெயர் கூறாதது என்னையெனின், அவை பெரு வழக்கின அன்மையான் ஈண்டு ஓதிற்றிலராயினும், அன்ன பிறவும் என்பதனாற் கொள்க. (9) இதுவும் அது | 160. | எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியும் அன்ன வியல என்மனார் புலவர். |
இதுவும் அது. இ - ள். எல்லாரும் என்னும் பெயரும், எல்லீரும் என்னும் பெயரும், பெண்மகன் என்னும் பெயரும் பால் விளங்கவந்த உயர்திணைப் பெயராம், எ - று. விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு. (10) இதுவும் அது | 161. | நிலப்பெயர் குடிப்பெயர் சூழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே இன்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோ டன்றி யனைத்தும் அவற்றியல் பினவே. |
இதுவும் அது. இ - ள். நிலப் பெயர் முதலாக ஓதப்பட்ட அனைத்தும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ - று.
|