124தொல்காப்பியம்[வினையியல்]

124

“திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை
வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம்
இசைபரந் துலகேழ்த வேதினாட் டுறைபவர்”

(கலி-பாலை-26.)

என்றவழி, ஏதினாட்டுறைபவர் அருளுவாராக என வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் ஈறுதிரிந்தது. பிறவுமன்ன.

(29)

செய்யும் என்னும் முற்றுப் பொருந்தாத இடம்

221.

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றாம் நிகழுங் காலத்துச்
செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா.

இதுவும் எய்தியது ஒருமருங்கு மறுத்தலை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். பலரை உணர்த்தும் படர்க்கையும், முன்னிலையும், தன்மையுமாகிய மூன்றிடமும் நிகழ்காலங் குறித்த செய்யும் என்னுங் கிளவியொடு பொருந்தா, எ - று.

ஈண்டும் இவ்வாறோதி; முன்னும் 1அவ்வாறு பொருட்கும் ஓரன்ன உரிமைய--செய்யும் செய்த என்னுஞ்சொல்லே எனவும் ஓதினமையாற் செய்யும் என்பது முற்றும் பெயரெச்சமும் என இருவகைப் படுமென்று கொள்க. அது முற்றாயுழித் தன்மையினும், முன்னிலையினும் உயர்திணைப் படர்க்கைப் பன்மையினும் வாராது, ஏனைப்பாலின்கண்ணே வரும் என்றவாறாம். அவனுண்ணும்; அவளுண்ணும், அது உண்ணும், அவையுண்ணும் என வரும். ஈண்டு நிகழ் காலங் குறித்த தென்னை; எதிர்காலங் குறித்து வாராதோ எனின், எதிர்காலத்துக்கண் வருவது காலமயக்கமாகக் கொள்க. முற்றுச் சொல் சேரக் கூறுகின்றாராகலின் இச்சூத்திரம் ஈண்டோதப்பட்டது.

(30)

வினையெச்ச வாய்பாடுகள்

222.

செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.

வினையெச்சம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். செய்து என்பது முதலாகச் செயற்கு என்பதீறாக ஓதப்பட்ட ஒன்பது வாய்பாடும் வினையெச்சச் சொல்லாம், எ - று.

வினையெச்சமாவது மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப் பெறாது நிற்கும். வினைச்சொல்லாவது பாலுணர்த்தாது காலங் காட்டி நிற்கும். செய்து என்பது இறந்த காலங் காட்டும். செய்யூ என்பது இறந்தகாலமும் நிகழ்காலமும்


1. வினையியல்--37.