130தொல்காப்பியம்[வினையியல்]

130

பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து வரும் என்றோதி, முற்றுச் சொல் எதிர்மறுத்து வரும் என ஓதாதது என்னை எனின், பெயரெச்சமும் வினையெச்சமும் ஓதுகின்றுழி உட்பட்ட சொல்லான் ஓதுதலின், எதிர்மறை ஓதல் வேண்டிற்று. முற்றுச் சொற் கீற்றெழுத்தோதினமையான் அவைதாமே மறுத்த வாய்பாட்டிற்கும் ஈறாதலின் ஓதல் வேண்டாவாயின. அஃதற்றாதல் அ, ஆ, வ என்னும் (சூ.19.) சூத்திரத்தானும் அறிக.

(39)

இடைப்பிற வரல்

231.தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின்
எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்.

இதுவும் இருவகை எச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பெயரெச்சமும், வினையெச்சமும் தம்மை முடிக்கும் சொல்லோடு சிவணும் குறிப்பினை யுடைய யாதானும் ஒரு சொல்லாயினும் இடை நிற்றலை நீக்கார் ஆசிரியர், எ - று.

எ - டு. கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்டுள் யானை இவை பெயரெச்ச இடைக் கிடப்பு. இவற்றுள் இடைக் கிடந்த சொல் யானை என்பதனோடு சிவணுதலின் அமைக்கப்பட்டது. பிறவுமன்ன. உழுது ஏரொடு வந்தான், உழ ஏரொடு வந்தான்--இவை வினையெச்ச இடைக் கிடப்பு. இவற்றுள் இடைக்கிடந்த சொல் முடிக்குஞ் சொல்லொடு சிவணுதல் அமைதியாயிற்று. பிறவுமன்ன.

இனிச் சிவணாதன:--உண்ட சாத்தன் தந்தை என்பது உண்ட என்பதற்குச் சாத்தன் தந்தையை முடிபாகக் குறித்தானாயிற் சிவணாதாயிற்று. வினையெச்சத்துட் சிவணாதன வந்தவழிக் கண்டு கொள்க.

(40)

செய்யும் என்னும் சொல்லின் திரிபு

232.அவற்றுள்,
செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை யுகரம்

1அவ்விடம் அறிதல் என்மனார் புலவர்.

செய்யும் என்னுஞ் சொல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கும், உம்மையாற் செய்யும் என்னும் முற்றுச் சொற்கும் ஈற்றுமிசை யுகரம் மெய்யோடுங் கெடும். அது கெடுமிடம் அறிந்து கொள்க, எ - று.


1. அவ்விடன் அறிதல் என்பது பிறவுரையாசிரியர்கள் கொண்ட பாடம்.