[வினையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்133

133

அப்பொருளை இனிது விளக்கும், எ - று. மிக்கது என்பது ஒருகாலங் குறித்து வரின் தொழில் குறித்ததாம். இயல்பு குறித்ததாயின் பண்பு குறித்ததாம். ஆற்றில் நீர் மிக்கதென்ற வழி, மிகுதல் இயல்பன்மையில் தொழில் குறித்ததாம். சுவர்க்கம் மிக்கது என்றவழி எக்காலத்தும் ஒக்குமாதலின் பண்பு குறித்ததாம். பூமியிற் சுவர்க்கம் மிகும் எனவும் ஆம். யாற்றுநீர் மிக்கது என்னும் பொருட்கண் மிகும் என்றதனாற் குற்றம் என்னையெனின், அவ்வாறு கூறின் இறந்த காலம் தோன்றாதாம். வந்தது கண்டு வராதது முடித்தல் என்பதனால் உயர்வு, தாழ்வு, குறைவு என்பனவும் இந்நிலைமைய என்று கொள்க. இச்சூத்திரத்தாற் பயன் ஒருசார் வினைச்சொற்கள் தொழிலுக்கும், பண்பிற்கும் பொதுவாகி நிற்கும் என்பதறிவித்தல்.

(45)

ஒருவினை இருபொருள் படுமாறு

237.இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்.

இது ஒருவினை இருபொருட் படுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இதனைச் செயல்வேண்டும் என்னும் வினைச் சொல் இரண்டிடத்தும் நிலைபெற்ற பொருளை யுடைத்து. சொல்லுவான் கண்ணும் பிறன்கண்ணும், எ - று.

எ - டு. நீ உண்ணல் வேண்டும் என்றவழி, நீ உண்பாயாகல் வேண்டும் எனத் தான் வேண்டிக் கோடற் பொருண்மை சொல்லுவான் கண் நிலைபெற்றது. சாத்தன் உண்ணல் வேண்டும் என்றவழி, உண்டலைப் பிறன் விரும்பும் எனப் பிறன்கண் நிலைபெற்றது.

(46)

இதுவும் அது

238.வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்
எதிர்மறுத் துணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே.

இதுவும் அது

இ - ள். வற்புறுத்தற் பொருண்மைக்கண் வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத்துப் பொருள் உணர்த்துதற்கு உரிமையாகலு முடைத்து, எ - று.

எ - டு. யான் வைதேனா, யான் வைதேனோ என்பன வினாப் பொருண்மைப்படுதலன்றி வைதிலேன் என எதிர்மறைப் பொருளும் பட்டவாறு கண்டுகொள்க.

(47)

வினைச்சொற்கள் வரும் காலவழுவமைதி

239.வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை.