கால வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். எதிர் காலத்து நிகழும் வினைச் சொல் இறந்தகாலத்தானும் நிகழ் காலத்தானும் பொருள் விளங்கத் தோன்றும்: ஓர் இயற்கையையும், ஒரு பொருளினது தெளிவையும் கிளக்குங் காலத்து, எ - று. எ - டு. ஆறலை கள்வர் இயங்குவதோர் காட்டிடைப்போக லுற்றானை, அவ்விடத்துப் போகுவையாயின் கூறை கோட்படுவை எனற்பாலான், பட்டாய் எனவும், படாநின்றாய் எனவுங் கூறும். இது இயற்கை. சென்றது சென்றது வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. (நாலடி.4). வாழ்நாள் செல்லாநின்றது எனற்பாலது சென்றது எனவும். கூற்று வரும் எனற்பாலது வந்தது எனவும் நிகழ்காலமும் எதிர் காலமும் இறந்தகாலத்தான் வந்தன. வாழ்நாள் செல்லுதலும் கூற்று வருதலும் ஒருதலை யாகலின், இவை தெளிவுபற்றி வந்தன. நிகழ்காலத்தான் வருவன வந்தவழிக் கண்டுகொள்க. (48) செயப்படு பொருளைச் செய்ததுபோலக் கூறல் | 240. | செயப்படு பொருளைச் செய்தது போலத் 1தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. |
இது வினைச் சொற்கள் தம்முள் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். செயப்படு பொருளைச் செய்யப்பட்டதெனக் கூறாது கருத்தாவைக் கூறுமாறு போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கியல் மரபு, எ - று. மரூஉ வழக்கு, எ - று. எ - டு. சோறடப்பட்டது, திண்ணை மெழுகப்பட்டது எனற்பாலன சோறட்டது, திண்ணை மெழுகிற்று எனவரும். உம்மையாற் கருவியைக் கருத்தாவாகக் கூறலும் கொள்க. வாள் வெட்டிற்று, சுரிகை குத்திற்று எனவரும். (49) வினைச் சொற்கள் வரும் காலவழுவமைதி | 241. | இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. |
காலமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று இ - ள். மயங்குதற்குரிய மொழிக்கண் இறந்தகாலமும் எதிர்காலமும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு காலமும் ஒப்பத்தோன்றும், எ - று. எ - டு. உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே என்றவழி, என்றார் எனற்பாலது என்மனார் என வந்தது. பிறவுமன்ன. (50)
1. தொழிற் படுத்தடக்கலும்--என்பதும் பாடம்.
|