[உரியியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்167

167

இசைப்பு என்பதன் பொருள்

307.இசைப்பிசை யாகும்.

இ - ள். இசைப்பு என்னும் சொல் இசைத்தல் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘யாழிசையூப் புக்கு’. ‘இசைத்தலு முரிய,’ ‘வாயிலிசை’ என ஒலிப்பொருட்கண் வந்தன.

(15)

அலமரல், தெருமரல் என்பனவற்றின் பொருள்

308.அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி.

இ - ள். அலமரல் என்னும் சொல்லும், தெருமரல் என்னும் சொல்லும் சுழலல் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘அலமர லாயம்’ (ஐங்-64); ‘தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள்.’

(16)

மழ, குழ என்பனவற்றின் பொருள்

309. மழவும் குழவும் இளமைப் பொருள்.

இ - ள். மழ என்னும் சொல்லும், குழ என்னும் சொல்லும் இளமை என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘மழகளிறு’. (புறம்-38); ‘குழக்கன்று’ (நாலடி-101)

(17)

சீர்த்தி என்பதன் பொருள்

310.1சீர்த்தி மிகுபுகழ்.

இ - ள். சீர்த்தி என்னும் சொல் மிகுபுகழ் என்பதன் பொருள்படும். எ - று.

எ - டு. ‘வயக்கஞ் சால் சீர்த்தி.’

(18)

மாலை என்பதன் பொருள்

311.மாலை இயல்பே.

இ - ள். மாலை என்னும் சொல் இயல்பு என்னும் பொருள்படும். எ - று.

எ - டு. ‘குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்’ (கலி-9.)

(19)


1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒன்றாகக் கொள்வர் நச்சினார்க்கினியர்.