168தொல்காப்பியம்[உரியியல்]

168

கூர்ப்பு, கழிவு என்பவற்றின் பொருள்

312.கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்.

இ - ள். கூர்ப்பு என்பதூஉம், கழிவு என்பதூஉம் முன்புள்ள தன்கண் மிகுதியைக் குறித்து வரும், எ - று.

எ - டு. ‘துனிகூ ரெவ்வமொடு’ (சிறுபாண்-39); ‘கழிகண்ணோட்டம்’ (பதிற்-22.)

(20)

கதழ்வு, துனைவு என்பவற்றின் பொருள்

313.கதழ்வும் 1துனைவும் விரைவின் பொருளே.

இ - ள். கதழ்வு என்னும் சொல்லும், துனைவு என்னும் சொல்லும் விரைவு என்பதன் பொருள்படும், எ - று.

கதழ், துனை என்னும் சொற்களை இனிது விளக்குதற்குப் பெயராக்கி ஓதினார். மேற் சொல்லப்பட்ட வற்றினும், இனி வருவனவற்றினும் குறைச் சொல்லாகி இவ்வாறு வருவன அறிந்துகொள்க.

எ - டு. ‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற்றிணை-203); ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்.’ (அகம்-9.)

(21)

அதிர்வு, விதிர்வு என்பவற்றின் பொருள்

314.2அதிர்வும் விதிர்(ப்பு)ம் நடுக்கம் செய்யும்.

இ - ள். அதிர்வு என்பதூஉம், விதிர்வு என்பதூஉம் நடுக்கம் என்பதன் பொருள் உணர்த்தும், எ - று.

எ - டு. ‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை, அதிர வருவதோர் நோய்’ (குறள்-429); ‘விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை’ (புறம்-20).

(22)

வார்தல், போகல், ஒழுகல் என்பவற்றின் பொருள்

315.

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள.

இ - ள். வார்தல் என்னும் சொல்லும், போகல் என்னும் சொல்லும், ஒழுகல் என்னும் சொல்லும் நேர்பு என்பதன் பொருண்மையும், நெடுமை என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ - று.


1. துனையும் என்பதும் பாடம்.

2. ‘அதிழ்வு’ என்ற பாடமும் உளதெனச் சேனாவரையர் உரையால் தெரிகின்றது.