| தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும் மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் அன்றி அனைத்தும் கடப்பா டிலவே. |
அதிகார முறையான் இசையெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பெயர்நிலைக் கிளவிகளினாகுஞ் சொல்லும், திசை நிலைக் கிளவிகளினாகுஞ் சொல்லும், பழமைத்தாகி நெறிப்படவருஞ் சொல்லினாகுஞ் சொல்லும், பொருணிலை மயக்கினாகுஞ் சொல்லும், மந்திரப் பொருள்வயினாகுஞ் சொல்லும் அவ்வனைத்தும் இச் சொற்குப் பொருள் இது வென்னும் நியமம் இல, எ - று. எனவே, தன்பொருள் ஒழியப் பிறிது பொருளும்படும் என்றவாறாம். ஒருசொல் இரண்டுபொருள்பட நின்றவழி, ஒரு பொருளை யுணர்த்தும் இசை எஞ்சி நிற்குமன்றே. அஃது இசை யெச்சமாவது என்று கொள்க. ஆகுஞ்சொல் என்றமையான், ஏற்பன கொள்ளப்படும். இசையெச்சம் ஐந்து வகையென்பது போந்தது. அவற்றுள், பெயர் நிலைக் கிளவியினாகுவன:--வேங்கை என்பது ஒருமரத்திற்குப் பெயராயினும், புலிக்கும் பெயராயிற்று. அதுவுமன்றிக் கைவேம் என்னும் பொருளும் பட்டது. இவ்வாறு ஒரு சொல்லினானே பிறிதுபொருள் உணரின், அதை யுணர்த்தும் ஓசை எஞ்சிநின்ற தெனக்கொள்க. இது பலபொருளொருசொல் அன்றோ எனின், ஆம்; பல பொருட்கண் ஒருசொல் வருதற்கு இலக்கணம் ஈண்டு உணர்த்துகின்றது. என்னை உணர்த்தியவாறு எனின், வேங்கை என்னுஞ் சொல், புலிப்பொருண்மை யுணர்த்திற்றாயின், மரப் பொருண்மை யுணர்த்தும் சொல் யாது என ஒருகடா வரும். அக்கடா வேங்கை என்றும் சொல்லின்கண்ணே மரப் பொருண்மையை உணர்த்துவதோர் ஓசை எஞ்சிநின்ற தெனினல்லது விடைபெறாதாம். அதனானே இலக்கண முணர்த்தியவாறு அறிந்து கொள்க. ‘திசைநிலைக் கிளவியி னாகுநவும்’ என்பது செந்தமிழ் நாட்டு வழங்குஞ் சொல் திசைச் சொல்லாகியவழிப் பொருள் வேறுபடுதல். கரை என்பது வரம்பிற்குப் பெயராயினும், கருநாடர் விளித்தற்கண் வழங்குப. தொன்னெறிமொழி யென்றதனான் முந்துற்ற வழக்காகித் தொடர்வுபட்டுச் செய்யுளகத்தினும், பரவை வழக்கினும் வருந் தொடர்மொழி என்று கொள்ளப்படும். ‘குன்றேறாமா’ என்றவழி, குன்று, ஏறு, ஆ, மா எனவும் படும்; குன்றின்கண் ஏறாநின்ற ஆமா எனவும் படும்; குன்றின் கண் ஏறா மா எனவும் படும். இவ்வாறு வரும் பொருட்கெல்லாம் இத்தொடர்மொழி தானே சொல்லாகி இதன்கண் இசை வேறுபட்டுப் பொருள் வேறுணர்த்தலின், அப்பொருண்மைகளை யுணர்த்தும் இசை எஞ்சிநின்றது. “காதற் கொழுநனைப் பிரிந்தல ரெய்தா-மாதர்க் கொடுங் குழை மாதவி தன்னொடும்” என்றவழி, இச் சொல்லெல்லாம் குருக்கத்
|