முன்னிலை வினைச் சொற்குரிய மரபு | 441. | முன்னிலை முன்னர் ஈயு மேயும் 1முன்னிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. |
இதுவும் முன்னிலை வினைச்சொற்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். முன்னிலை வினைச்சொற்கண் ஈகாரமும்-மகரமூர்ந்த-ஏகாரமும் முன்னிலை மரபினையுடைய மெய்யை ஊர்ந்துவரும், எ - று. முன்னிலை மரபின் மெய்யாவன உண், தின் என்னுஞ் சொற்கண் ஈற்றெழுத்தோடு பால்காட்டும் எழுத்தினைப் புணர்க்க இடையே வரும் மெய்யெழுத்து. எ - டு. “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” (அகம்-46.) “அட்டி லோலை தொட்டனை நின்மே” (நற்றிணை-300.) 2“இன்னாதுறைவி யரும்படர் களைமே” எனவரும். மேல் ஓதப்பட்ட இ, ஐ, ஆய் அன்றி இவையுஞ் சிறுபான்மை வருமெனக் கொள்க. (49) வினைச்சொற்களுக்குரிய வழுவமைதி | 442. | கடிசொல் லில்லைக் காலத்துப் படினே. |
இது வினைச்சொற்கண் வருவதோர் வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தான் வந்தில எனக்கடியப்படா: அவ் வினைச்சொற்கள் காலத்தொடு பொருந்தின், எ - று. காலமாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம். காலப் பொருண்மை மயங்காமல் வரின், ஈறு திரியினும் அமைக என்றவாறு. எ - டு. “மறம்பாடிய பாடினியும்மே, பேருடைய விழுக்கழஞ்சிற், சீருடைய விழைபெற் றிசினே. இழைபெற்ற பாடினிக்குக், குரல்புணர்சீர் கொளைவல்பாண்மக னும்மே. எனவாங்கு, ஒள்ளழற் புரந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.” (புறம்.11.) என்பதனுட் படர்க்கை வினைச்சொல் ஈறுதிரிந்து நின்றது காலப்பொருண்மை வழுவாமையின், குற்றமின்றாயிற்று. 3“ஆரமரலறத் தாக்கித் தேரோ, டவர்ப்புறங் காணேனாயிற் சிறந்த, பேரம ருண்க ணிவளினும் பிரிக” எனவும், 4“முறை திரிந்து, மெலிகோல் செய்தே னாகுக” எனவும் தன்மைக்கண் எதிர்காலங் குறித்த வஞ்சினம் வியங்கோள் வாய்பாட்டால் வந்தன.
1. அந்நிலை ஏனை உரைப்பாடங்கள். 2. புறம்-145. 3. 4. புறம்-71.
|