என்பது என் சொன்னவாறோவெனின், பெயரும், வினையும் போலப் பொருளை நேர்காட்டாது, ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை யுருபுபோல, வேறுபட்ட பொருளைக் குறித்து நிற்றலின், இடைச்சொல்லும் பொருள் வேறுபடுக்குஞ் சொல் எனப்படும்; பொருளுணர்த்துஞ் சொல்லெனப் படா. மன் என்பது கழிவினும், ஆக்கத்தினும், ஒழியிசையினும் வந்தவழித், தானிடைப்பெற்று நிலைமொழியின் வேறுபட்ட பொருளைக் குறித்து நின்றதல்லது, அப்பொருட்கு வாசகமன்றி நின்றமை கண்டு கொள்க. பிறவுமன்ன. (53) | 446. | உரிச்சொன் மருங்கினும் உரியவை உரிய. |
உரிச்சொல் மருங்கினும் இடைநின்று பொருளுணர்த்துஞ் சொல்லுள என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உரிச்சொல்லிடத்தும் வேற்றுமை யுருபுபோல அப்பொருள் வேறுபடுத்தற்குரியவை உரியவாம். எ - று. அது நனி என்பது உறுவும், தவவும்போல மிகுதி குறித்து வரினும், உறுவன, தவவன, எனப்பொருளுணர வாராது, இடைச் சொற் போலக் குறிப்பினான் மிகுதி யுணர்த்துதலின், இதுவும் பொருள் வேறுபடுக்குஞ் சொல்லாயினல்லது, பொருளுணர வாராமை கண்டுகொள்க. பிறவும் அன்ன. (54) வினையெச்சத்திற்குரிய வேறுபாடு | 447. | வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. |
வினையெச்சத்திற்குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வினையெச்சச்சொல்லும் வேறுவேறாகிய பல இலக்கணத்தையுடைய, எ - று. வேறுகுறிய என்னாது பல்குறிய என்றது சொல்லானும், பொருளானும் வேறுபடும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. சொல்லான் வேறுபடுதலாவது பொதுவகையான் எடுத்து ஓதிய செய்து, செய்யூ என்பன, உகர ஊகார ஈறாகி வருதலேயன்றிப், பிறவீற்றானும் வருதலும், எச்சச் சொல்லாகி வரற்பாலது முற்றுச்சொல்லாகி வருதலும். பொருளான் வேறுபடுதலாவது ஒருவாய்பாட்டான் உணரும் பொருளை மற்றொரு வாய்பாட்டாற் கூறுதலும். எல்லா வினையெச்சமும் பிரித்துநோக்குவார்க்குப் பெரும்பான்மையும் வேற்றுமைப் பொருளாகித் தோற்றுதலும். அவையாமாறு:--செய்தெனெச்சத்துக்கண் ஓடி, போய் எனவும், செய்யூ என்பதன்கட் செய்யாயெனவும் வருவன ஈறுவேறுபட்டு வந்தன. 1‘மோயினள் உயிர்த்தகாலை’ எனவும், “ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி” எனவும் கண்ணியன் வில்லன் வருமெனவும் வரும். இவை வினையெச்சமுற்றாகி வந்தன. இவற்றுள், மோந்து என்பது மோயின ளெனவும், கொய்ய வென்பது கொய்குவமெனவும், கண்ணியணிந்து வில்லையேந்தி யென்பன கண்ணியன் வில்லன் எனவும் முற்றுவாய்பாட்டான் வரினு மெச்சப்பொருண்மைத்தாகலின் வினையெச்சமெனப்பட்டன.
1. அகம் 5.
|