முரித்து, அஃறிணை ஒருமையாற் கூறலுமுரித்து அப்பொருள், எ - று. மேல் தானறி பொருள் என்றமையானும், ஈண்டு இருவீற்று மென்றமையானும் திணை ஐயம் என்பது பெற்றாம். ஐயம் என்பது அதிகாரத்தான் வந்தது. இருவீற்று முரித்து என்பதனை உரித்திரு வீற்றும் என்று மொழி மாற்றுக. அஃறிணைப் பிரிப்பென்றதனால் பொதுமையிற் பிரிவது ஒருமையாதலின் ஒருமைச் சொல்லாற் சொல்லினும் என்றாராகக் கொள்க. குற்றியோ மகனோ என ஐயுற்றுழி, குற்றியோ மகனோ தோன்றுகின்ற உருபு, தோன்றுகின்ற அது என்க. உருபு என்றதனான், அப்பொருள் பயக்கும் பிழம்பு, வடிவு, பிண்டம் என்பனவும் கொள்க. (24) ஐயுற்றதனைத் துணிந்துழிச் சொல்லும் மரபு | 25. | தன்மை சுட்டலும் உரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. |
மேல் ஐயப்பட்ட பொருள் துணியப்பட்டவழிச் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். துணியப்பட்ட பொருளின் வேறாகிய பொருட்கண் வரும் அன்மைக் கிளவி, துணியப்பட்ட பொருளைச் சுட்டலும் உரித்தென்று சொல்லுவர் புலவர், எ - று. தன்மை என்பதனான் அப்பொருட்கு இயல்பு என்பது பெற்றாம். பெறவே துணியப்பட்ட பொருளாயிற்று. வேறிடத்து அன்மைக்கிளவி தன்மை சுட்டலும் உரித்தெனக் கூட்டுக. உம்மை எதிர்மறை யாதலால் சுட்டாமை பெரும்பான்மை. எ - டு.குற்றியல்லன் மகன்; மகன் அன்று குற்றி; பெண்டாட்டி அல்லன் ஆண்மகன்; ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி; ஒன்றல்ல பல; பலவன்று ஒன்று இவை துணியப்பட்ட பொருளைச் சுட்டி வந்தன. குற்றியன்று மகன்: மகன் அல்லன் குற்றி; பெண்டாட்டியல்லள் ஆண் மகன்: ஆண்மகன் அல்லன் பெண்டாட்டி; ஒன்றன்று பல; பலவல்ல ஒன்று இவை துணியப்படாத பொருளைச்சுட்டி வந்தன. குற்றியல்லன் மகனே எனத் தேற்றேகாரங் கொடுத்துழி அன்மை துணியப்பட்ட பொருளைச் சுட்டில், குற்றி நின்று வற்றும் ஆதலால், அன்மைக்கிளவி அல்லாத பொருளைச் சுட்டுதல் ஆசிரியர் மதமென்று கொள்க. (25) வண்ணச்சினைச் சொல் பற்றிய மரபு | 26. | அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். |
|