வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்
எதிர்மறுத் துணர்த்தற் குரிமையு முடைத்தே (சூ-245) 

 

செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே (சூ-247)

 

என்ற   இருநூற்பாக்களும்   காலமயக்க    அதிகாரத்தில்    இயைபின்றி
வினையியலில்  இடம்  பெற்றுள்ளன  எனவும்,  அவை எச்சவியலில் உரிய
இடத்தில்  இருத்தல்   வேண்டும்   எனவும்   சுட்டுகின்றார்.  இங்ஙனமே
எச்சவியலிலுள்ள  'இறப்பின்  நிகழ்வின்......முற்றியல் மொழியே' 'எவ்வயின்
வினையும்  அவ்வியல்  நிலையும்' 'அவைதாம் தத்தங்கிளவி......முடிபினவே.'
(சூ-428-30)   என்பன   வினையியலில்  'செய்தென்   எச்சத்து'  (சூ-240)
என்பதனை   அடுத்திருத்தல்   வேண்டும்    என்று    குறிப்பிடுகின்றார்.
நூற்பாக்களுக்கு  இவர் கருதும் இடமாற்றங்கள் மிகப் பொருத்தமானவையே.
நூற்பா   இரண்டு    மறைந்திருத்தல்    வேண்டும்   என்பதும்   நேரிய
செய்தியேயாம்.
 

இனித், திருத்தம்பெற்ற நூற்பாக்களை நோக்குவோம்:-
 

சூ.18:பண்புகொள்   பெயர்க்கொடை   வழக்கா     நல்ல    எனின்,
பெயர்க்கொடை  என்ற ஒருமைப்  பெயருக்கு அல்ல என்ற பன்மை வினை
ஒவ்வாமையின் 'வழக்கா றல்லாச் செய்யுள்  ளாறே' என்ற பாடங்கொள்ளப்
பட்டது.  'அல்லா'  என்பது   பெயரெச்ச   மறையாய்   ஒருமைப்பன்மை
மயக்கத்திற்கு இடந்தாராமல் அமைகிறது என்பார் உரைகாரர்.
 

"ஈரளபிசைக்கும்  இறுதியில்  உயிரே ... உளவென  மொழிப  பொருள்
வேறுபடுதல்"  (சூ-288)  "வெளிப்படு   சொல்லே   கிளத்தல்   வேண்டா
வெளிப்பட  வாரா உரிச்சொல்மேன" (சூ-299) என்ற நூற்பாக்களில் ஒருமை
எழுவாய்ப்  பன்மை   வினையொடு  முடிதலைக்  காண்கிறோம்.  எனவே,
வழக்காறு அன்று  என்னாது அல்ல என்றமையின் இனச்சுட்டில்லாத் திசை,
சினை,  தொழில்  போன்ற  அடைகளும்  கொள்ளப்படும்  என்ற  குறிப்பு
வரைந்து பழைய பாடத்தையே கோடல் சாலும்.*
 


* ஆய்வுரைதவிர்ந்த    நூற்பாக்களின்     உரை-விளக்கம்    யாவும்
காண்டிகையாகச் சுருங்க வரையப்பட்டுள்ளமையின்-'தெற்றென விளங்காதன,
ஐயப்பாடுடையன'  என  ஐயரவர்கள்  குறிப்பிட்டுள்ளவை எனது தமிழியற்
கோட்பாடுகள் என்னும் கட்டுரை  நூலில்  தெளிவாகும். ஈண்டு மாணாக்கர்
முட்டுப்பாடுறாவண்ணம் சிலவற்றிற்குக்குறிப்புத்  தந்துள்ளேன்-சில திருத்திக்
கொள்ளத் தக்கவையே.