அங்ஙனம் கூறியிருப்பின் இவ்விதி ஒருவன் ஒருத்தி என்னும் படர்க்கைச் சொற்களுக்கு மட்டுமே செல்லும். ஒருவேன், ஒருவை என்னும் தன்மை, முன்னிலை எண்ணுப் பெயரும் அடங்க இவ்வாறு ஓதினார் என்க. |
| சூ.45: | வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார் |
(45)
|
க-து: | வியங்கோளின்கண் திணை விரவி வருமென்கின்றது. |
| |
உரை: வியங்கோள் முடிபின்கண் எண்ணப்படும் பெயர்கள் திணைவிரவி வருதலை நீக்கார் ஆசிரியர். |
எ-டு:வீரரும் யானையும் வெல்க! ஆவும் ஆயனும் செல்க!, யாமும் எந்நாடும் உயர்க! தமிழும் தமிழரும் வாழ்க! கயவரும் தீமையும் ஒழிக! எனவரும். |
வியங்கோள் வினை இருதிணைக்கும் பொதுவாயினும் விரவுமிடத்து ஒருதிணைப்பொருளை நோக்கின் மற்றொன்றுக்கு அதுபிறிதாகலின் மயங்கிற்றாம். இம்மயக்கம் தம்மரபினவாதலானும் பிறிதாறின்மையானும் வழாநிலையாகக் கொள்ளப்படும் என்க. |
இனனல்லன உடன் எண்ணுப்படுதலின் வழுவாயிற்றென இளம்பூரணரும், அஃறிணை ஏவற்றொழிலைமுற்ற முடியாமையின் வழுவாயிற்றென்று நச்சினார்க்கினியரும் கூறினர். இனமானவற்றையே எண்ணுதல் வேண்டும் என்னும் விதியின்மையானும், ஏவலுக்கும் வியங்கோளுக்கும் வேற்றுமையுள்ளமையானும் அவர் கூற்றுப் பொருந்தாமை வெளிப்படை. |
வியங்கோள்வினை தன்மை முன்னிலைக்கண் தனக்குரிய இலக்கணத்திற்றிரியாமல் வரும் என்பதனை. அவற்றுள், "முன்னிலை தன்மை ஆயீடத்தொடும். மன்னா தாகும் வியங்கோட் கிளவி" என்னும் சூத்திர உரையுள் கூறுதும். முன்னிலை வினைக்கண்ணும் திணை விரவுதல் சொல்லாற் புலப்படா ஆதலின் அவற்றை நீக்கிப் படர்க்கைச் சொல்லாகிய வியங்கோள் வினையைச் சுட்டிக் கூறினார். |
இனி, 'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்' எனப் படர்க்கைச்சொல்லும் முன்னிலைச் சொல்லும் விரவி முன்னிலை ஏவல் வினையான்முடிதல் செய்யுள் முடிபாதலின் இன்னோரன்ன இவ்வதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும். |