உரை:வேறுபட்ட வினையை உடைய பொருள்கட்குப் பொதுவாகி வரும் சொல்லை அவற்றுள் ஒன்றற்குரிய வினையாற் கிளந்து கூறார் புலவர். சொல் என்றது பொருளை. எனவே பொதுவினையாற் கிளப்பர் என்றவாறு, பொதுப் பொருளாவன: அடிசில் (உணவு) அணி, இயம், படை முதலாயவை. |
அடிசில் என்பது தின்னுவன, பருகுவன, நக்குவன உரிஞ்சுவனவற்றிற்குப் பொது. ஆதலின் அவற்றுள் ஒன்றாற் கூறாமல் அடிசில் கைதொட்டார், அடிசில் உண்டார் எனவும், அணி என்பது கவிப்பன, கட்டுவன, செறிப்பன, பூண்பனவற்றிற்குப் பொது ஆதலின் அணியை அணிந்தார், மெய்ப்படுத்தார் எனவும், எழுப்புவன, கொட்டுவன, ஊதுவனவற்றிற்குப் பொதுவாகிய இயத்தை, இயம் இயம்பினார், இசைத்தார் எனவும் எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவனவற்றிற்குப் பொதுவாகிய படையைப் படைவழங்கினார், தொட்டார் எனவும் பொதுவினையாற் கிளக்க என்றவாறாம். |