76கிளவியாக்கம்

பொதுச்சொல்.     கெலாடி    படர்ந்தது   எனின்   முல்லை   முதலிய
பூக்கொடிகளையும், கொடி  பறந்தது   எனின்   புலிக்கொடி,   கயற்கொடி
முதலிய அரச அடையாளக் கொடிகளையும் படர்ந்தது,  பறந்தது  என்னும்
வினைகள் உணர்த்தின.    ஆதலின்   அவை   வேறுபடுத்தும்   சிறப்பு
வினையாயின. கொடி அசைந்தது எனின் அசைதல்   முல்லைக்கொடிக்கும்,
புலிக்கொடிக்கும் ஒக்குமாதலின் அது வேறுபடுத்தாத பொதுவினை ஆயிற்று.
இங்ஙனம் வினையான் வேறுபட்டும், வேறு படாதும்   நிற்கும்   நிலையை
இருவகைய என்றார்.
 

எ-டு:திரை பரவிற்று (நீரலை) திரை   அவிழ்ந்தது   (திரைச்   சீலை)
இவை வேறுபடுவினை திரை எழுந்தது வேறுபடா  வினை.   மா   பூத்தது
(மரம்) மா ஓடிற்று (விலங்கு)  இவை    வேறுபடுவினை,   மா   வீழ்ந்தது
வேறுபடா வினை. பிறவும்   இவ்வாறே   காண்க.   பலபொருளொருசொல்
இனத்தானும் சார்பானும் குறிப்பானும் வேறுபடுமாயினும்  வேறுபடுத்தற்கண்
வினைசிறப்புடைமையின் அதனாற் பெயர் கொடுத்தார் என்க.
 

வினை எனக் கூறினாரேனும் இம்மாவயிரம்,   இம்மாவெளிறு,   இம்மா
ஏறு, இம்மாபெட்டை என வேறுபடுத்தும் பெயரும், மாஒன்று  மாபல  என
வேறுபடுத்தாப்பெயரும் பயனிலை வகையான்வருதலும் கொள்ளப்படும்.
 

இனிக், கடிமலர், கடிகா, கடிநுனைப்பகழி என்றாற் போலப்  பலபொருள்
பற்றி வரும் 'கடி'   என்னும்    உரிச்சொல்    போல்    வருவனவற்றை
வினைவேறுபடாப் பலபொருளொருசொல் எனக்  கொள்ளலாமோ  எனின்?
உரிச்சொற்கள் பெயர் வினைகட்கு அடையாக வந்து அவற்றின்  பொருளை
வேறுபடுப்பதன்றித் தனித்து நின்று அவை தாமே  பொருள் தாராமையின்
ஆகாதென்க.
 

சூ. 53:

அவற்றுள் 

வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் 

வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் 

தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே  

[53]
 
க-து:

வினைவேறுபடூஉம் பல பொருளொருசொல் பொருள் உணர்த்துமாறு
கூறுகின்றது. 

 

உரை:மேற்கூறிய இரண்டனுள் வினையான்   வேறுபடும்  பல  பொரு
ளொருசொல்  அவ்வப்   பொருளை   வேறுபடுத்தற்குரிய   வினையானும்
இனத்தானும் சார்பானும் பொருள் தெரியும்   நிலைமைக்கண்   இதுவாவது
இது எனத் தெரியுமாறு புலப்பட நிற்கும்.