78கிளவியாக்கம்

கொக்கு, பாயா வேங்கை, பூவா   வேங்கை   எனச்   சிறப்பு   வினையை
மறுத்துக்கூறுதலும் கிளந்து கூறுதலாய் அடங்கு மென்க.
 

சூ. 55 :

குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி  

[55]
 
க-து :

பலபொருட் பொதுச்சொல்லைக் கிளக்குமாறு கூறுகின்றது. 

 

உரை :சில பொருட்குப்  பொதுவாகிய சொல்லினை ஒரு  பொருளைக்
குறித்துக் கூறுவோன் அக்கூற்றினை     இன்னது    எனத்   தெரிவிக்கும்
மொழியோடு கூறுக.
 

'நோக்கு' 'நோக்கம்' என நின்றாங்குக் கூற்று, கூற்றம் என நின்றது. கிள
என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஏவற்பொருள் தரும் இகரவிகுதிபெற்று
வருதி--பெயர்தி என்றாற்போல ஏவல் கண்ணிய வியங்கோளாய்க் கிளத்துக
என்னும் பொருள்பட   நின்றது.    [கிள + வ் + இ = கிளவி]   குறித்துக்
கூறுவோன்   (குறித்தோன்)     என்றதனான்   அஃது   பலபொருட்குரிய
பொதுச்சொல் என்பது பெறப்பட்டது. அவையாவன: பார்ப்பு, பறழ், முதலாய
இளமைப் பெயர்களும் ஏறு, ஏற்றை   முதலிய   ஆண்பாற்   பெயர்களும்
பேடை, பெட்டை முதலாய பெண்பாற்   பெயர்களும் புள்,  விலங்கு,  புல்,
மரம் முதலியவற்றின் சாதிப் பெயர்களும் பிறவுமாம்.
 

எ-டு : 'கன்று' என்பது யானை, ஆன்,  மரம்,   புல்   முதலியவற்றின்
இளமைப் பெயர் ஆதலின் கன்றினைப் போற்றுக, கன்றிற்கு நீரூட்டுக எனப்
பொதுவில் கூறாமல், ஆன்கன்று மாங்கன்று  எனவும், ஏறு  வந்தது  எனப்
பொதுவிற் கூறாமல் ஆனேறு வந்தது, அரியேறு வந்தது  எனவும்,  சேவல்
என்பது பறவைகட்குரிய ஆண்பாற்   பொதுப்   பெயராகலின்  சேவலைக்
கொணா எனப் பொதுவிற் கூறாமல் கோழிச்சேவல், குயிற்சேவல்,  அன்னச்
சேவல் எனவும் இவ்வாறே கோழிப்பெடை, மயிற்பெடை எனவும்  தெரித்து
மொழியாற் கிளக்கப்பட்டு வரும். 
 

இனிக், குறிப்பானும்   முன்னும்   பின்னும்   வரும்   நிகழ்வுகளானும்
கேட்போர்க்குத் தான் குறித்த  பொருள்  திரிபின்றி   விளங்கிநிற்குமாயின்
வாளா கூறப் பெறுமென்க.
 

எ-டு :கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்   (சிலம்பு)   கன்றாற்றுப்
படுத்த புன்றலைச் சிறார் (குறு-24)  சேவலங்கொடியோன்   காப்ப  (குறு-1)
நிவந்தோங் குயர்கொடிச் சேவலோயே (பரி-3) என வரும்.