சூ-38:சுட்டுப்பெயர்க்   கிளவி   முற்படக்கிளவார்-இயற்பெயர்  வழிய
என்மனார்  புலவர்  என்பதே  நூற்பா  அமைப்பாதலானும்.  இயற்பெயர்க்
கிளவி  முற்படக்கிளவார் (சூ-41) எனப் பிறாண்டும் வருதலானும், பயனிலை
செய்யுள்  விகாரத்தால்  தொகுதலை  இவ்வுரையாளரும்  68ஆம்  நூற்பா
உரையுள் இசைந்துள்ளமையானும்: இந்நூற்பா உரையுள் கிளவா என்பதற்குக்
கிளக்கப்படா  என்றும், அடுத்த  நூற்பா  உரையுள் கிளத்தல் என்பதற்குக்
குறிப்பிடுதல் என்றும், படுசொல் புணர்த்தும்,  புணர்க்காமலும் உரை செய்ய
வேண்டியுள்ளமையானும் பழைய பாடமே கோடலிற் பிழையின்று.1
 

சூ. 44 :'ஒருமை  எண்ணின்  ...  நில்லாது'  பொதுப்பிரிபாற்  சொல்
ஒருவன் ஒருத்தி என்ற இரண்டாகலான் நில்லா என்ற பாடமே சிறக்கும்.
 

சூ. 132 :அகரமும் என்ற பாடம் சிறப்பாக உள்ளது.
 

சூ. 183 :"பன்மை சுட்டிய  எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவர்
என்னும்  -  என்றிப்   பாற்கும்  ஓரன்  னவ்வே"  என்னும்  -  என்று -
இப்பாற்கும்  என்ற  தொடரில் 'என்று' என்ற சொல் பொருளிலதுமொழிதல்
என்ற சிதைவுக்கு எடுத்துக்காட்டாகக்  கூடியது. ஆதலின்  ஒருவர் என்னும்
அவ்விரு  பாற்கும்  என்ற  பொருள்தரும்  "ஒருவர்   என்னும்  அன்றிப்
பாற்கும்"  என்ற  பாடத்தை   உரையாளர்  கொண்டுள்ளார்.  உரையாளர்
கொண்ட பாடத்தில் சிதைவின்மையும் பொருட்டெளிவும் உள்ளன. ஆனால்
அகரச்சுட்டு  அன்றி  எனத்திரிதல்  அன்றி   யனைத்தும்  என்றே  ஒரே
தொடரிலேயே  அமையுமாறு  தொ-எ-144,  210, 224, - சொ-66, 138, 166,
426, 427, 450  என்ற  நூற்பாக்களான்  போதருதலின்  பிற சொற்களொடு
புணர்தற்கண் அகரம் அன்றி என்று ஆகுமா என்பது ஆராயத்தக்கது.2
 

சூ. 408:"அடிமறிச்  செய்தி  அடிநிலை  திரியாது-சீர்  நிலை திரிந்து
தருமா றும்மே"  என்ற பாடமே அடிமறிமாற்றுப் பொருள்கோளுக்கு ஏற்றது
என்று உரையாளர்  கொண்டுள்ளார். அடுத்த நூற்பா இருசீர் எழுத்துவயின்
திரியும்  தோற்றமும்  என்று  வருதலின்  'அடிநிலை  திரிந்து   சீர்நிலை
திரியாது' என்ற பாடமே சிறக்கும் போலும். 


1. சூ: 14, 18, 38.    ஏடெழுதினோர்    குறையாகலாம்    எனக்கருதி
ஓரெழுத்தளவில்  பாடம்  திருத்திக் கொள்ளப்பட்டன. 'நில்லாது' என்பதை
மறுக்கவில்லை.
 

2. இதன்  கண்ணும்  அன்றி  என்னும்  சுட்டு  'பாற்கும்' என்பதனைச்
சார்ந்தே வந்துள்ளமையானும், பிறிதாறின்மையானும் ஏற்கும்.