சொற்பொருளாராய்ச்சியில்  மிக்க  பழக்கமுடைய  இவ்வுரையாளர் பல
சொற்களைப்   பகுத்து   அவற்றின்   பொருளமைப்பையும்,    அவற்றின்
தொல்லுருவங்களையும்  இவ்வுரையில்  பல   இடங்களிலும்   குறிப்பிட்டுச்
செல்லுகிறார்.  சொல்லின்   தொல்லுருவங்களை  ஆராய்வாருக்கு  அவை
பெரிதும் பயன் தருவனவாம். அவற்றுள் சில வருமாறு:-
 

சொல் (ப-23)  கிளவி (ப-24) ஆக்கம் (ப-24) என்மனார் (ப-26) திணை
(ப-26) கிளவி (ப-78) வியங்கோள் (ப-78) ஐ (ப-102) ஒடு (ப-110) கு (ப-114)
இன் (ப-118)  கண் (ப-125) அனல்  முதலியன  (ப-115) நமரங்காள் (ப-174)
பெயர் (ப-180)  வினை (ப-216) காலம்  (ப-218) வியம் (ப-240) எல் (ப-256)
உறு   முதலியன   (ப-339)   இவை   யாவும்   ஏனையோர்   உரையில்
காணக்கிட்டாதனவாம்.
 

இனி,   இவ்வுரையாளர்   வரைந்துள்ள   இப்பெருநூலில்   தெளிவாக
அறிந்துகொள்ள இயலாமல் ஐயமும்  மருட்கையும் விளைக்கும் செய்திகளும்
நம்மனோர்க்குத் தெற்றெனப்  புலனாகாத  வகையில் சில அமைந்துள்ளன.
அவற்றை நிரலே நோக்குவோம்.
 

சூ. 5-9:பின்   உவமவியலுள்    கூறப்பெறும்    உவமத்தொகையை
உளங்கொண்டு  "உவமத்  தொகையே  உவம  வியல"  என எச்சவியலுள்
குறிப்பிட்டாற்போலப்  பின்   பெயரியலுள்  விரிவாக  விளக்கும்  பெயரிற்
றோன்றும்  பாலறி  கிளவியைக்  கிளவியாக்கத்தில் சுட்டினார் என்பதனால்
குறைவின்மையானும் இயைபுபற்றி  "னஃகான் ஒன்றே" முதலிய நூற்பாக்கள்
சுட்டப்படக்கூடியன  பெயர்களுள்  ஒருசிலவேயாகலானும் னஃகான் ஒற்றே
முதலிய   நூற்பாக்களின்   உரையில்   ஈறுபற்றிப்   பால்   தெரிவிக்கும்
பெயர்களைச்  சுட்டவேண்டியது  இன்றியமையாததாகத்   தோன்றவில்லை.
மேலும்  தெய்வச்சிலையார்   குறிப்பிட்டுள்ளமைமேலே  ஐம்  பால்பற்றிய
பெயர்கள்   எல்லாவற்றையும்   சுட்டாது    ஆண்   பெண்   பலர்பால்
என்பவற்றுக்குரிய  பெயர்களையே   சுட்டியமைதல்  குன்றக்   கூறுவதாய்
முடியும் (பக். 35-37).1 


1. தந்தைமார்,    தாய்மார்,    அண்ணன்மார்     என்றாற்போல்வன
பெயரியலுள்  பெறப்படாமை கருதி அதனைச்சுட்டி அதனொடு ஏனையவும்
காட்டப்பட்டன.   அஃறிணை   ஈறுகள்    தெரிநிலையும்   குறிப்புமாகிய
வினைகட்கு  ஈறாய்  வந்து  பெயராவதன்றி  உயர்திணை  ஈறுகள்  போல
ஆக்கம் பெறுதலரிது. ஆதலின் காட்டப் படவில்லை.