சொல்லொடு சேர்ந்து வரையனைய யானைக்கு நிலை என்று பொருள் படுவதைச் சுண்ணமொழி மாற்றாக ஏற்க மறுக்கிறார். தாவீது யோசேப்பு வாத்தியார் 1893ல் இயற்றிப் பதிப்பித்த தமிழ் இலக்கணத் தெளிவு என்ற நூலில் அவரே இயற்றிப் புணர்த்த "கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை" என்ற அடியை மறைந்து போன முதலடியாகக் கொள்கிறார் (பக்-355) இச்செய்திகள் மயக்கத்திற்குரியன.10 |
சூ. 28:"தரவினும் ...... அந்நாற் சொல்லும்" இந்நூற்பாவில் தரல் வரல் கொடை செலவு என்ற நான்குசொற்களே சுட்டப்பட்டுள்ளன. அந்நாற் சொல்லும் என அவை சொல் பற்றியன்றிப் பொருள் பற்றி ஓதப்பெறவில்லை. முதனிலைவகையால் இடமுணர்த்தும் ஆற்றலுடையன அவையே அங்ஙனமாக அவை பொருள் பற்றி ஓதப்பட்டனவாகக் கொண்டு போதல் நீங்குதல் இரிதல் முதலியவற்றை அவற்றுள் அடக்கியதன் பொருத்தம் போதரவில்லை.11 |
சூ. 32:இந்நூற்பா உரையுள் யாது...... அறியாப் பொருள்வயின் ஐயந்தீர்த்தற்கு வருதலேயன்றி அறியப்பட்ட பொருள்வயின் ஐயந்தீர்த்தற்குந் தேர்ந்து கொள்ளப்பட்ட சொல்லாதலும் உண்டு என்று குறிப்பிடுகின்றார். அறியான் வினாவும் ஐய வினாவும் அறிவுறூஉ வினாவும் என வினா மூவகைப்படும் (பக்-44) என்று குறிப்பிடும் உரையாளர் அறியாப் பொருள்வயின் ஐயந்தீர்த்தற்கு வரும் எனல் பொருந்துவதாக இல்லை. எகரம் வினாப்பொருளில் வருதல் இடைக்கால வழக்கு என்பவர் (பக்-59) இடையியல் புறனடைச் சூத்திரவுரையில் (பக்-297) எக்கடல் எவ்வீடு எந்நூல் என்னுமிடத்து எகரம் வினாப் பொருள் குறித்து நிற்றல் சான்றோர் வழக்கினுள் வருவதாகக் குறிப்பிடுதல் பொருந்துவதாக இல்லை (பக்-302)12 |
சூ. 43.தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விரவி வருதலை வழாநிலையாகக் கொள்பவர் (பக்-68) அஃறிணையை உளப்படுத்தும் தன்மைப்பன்மை வினையை வழுவமைதி என்று கூறுவதன் பொருத்தம் ஆராய்தற்குரியது. |
|
10. சுண்ணம் என்பது பிழையே - மொழிமாற்று எனத் திருத்திக் கொள்க. இது நன்னூலுணர்வினால் நேர்ந்த சோர்வாகும். |
11. பொருள் பற்றி ஓதப்பட்டதாகக் கொள்ளலாம் என்பது என் கருத்து. |
12. 'அறியாப்பொருள் வயின் ஐயந்தீர்த்தற்கு வருதலேயன்றி' என்னும் தொடரில் 'ஐயந்தீர்த்தற்கு' என்றபகுதி நீக்கப்படல் வேண்டியதே. |